உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்தனர்.

வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தனது பதவிக் காலத்தினுள் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாராட்டிய பிரதிநிதிகள், இலங்கை ஆரம்பித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.

அச்சத்திற்குள்ளாகியிருந்த சமூக மற்றும் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதை அனைத்து பிரதிநிதிகளும் பாராட்டினர்.

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகவுள்ள அனைத்து துறைகளிலும் துரித அபிவிருத்தியை அடைந்து நாட்டை முன்கொண்டு செல்லும் முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.