அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகள் என்பதால் மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது இரண்டு நாடுகளினதும் மக்களின் அபிலாஷைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த முன்மொழிவுகள் தற்போது நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இன்று (14) பிற்பகல் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் வேல்ஸ் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மிலேனியம் சவால் கூட்டுத்தாபன உடன்படிக்கை ஏனைய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து நிபுணர் குழு விசேட கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

துரித பொருளாதார அபிவிருத்தியுடன் வறுமையற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவது தனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். 

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை வலுவூட்டுவதற்கு எளிமையான வரி முறைமையையும் தேவையான வசதிகளையும் வழங்கும் வர்த்தக சூழலை நாட்டில் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தொழிற்துறை அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ள முக்கிய துறைகளுல் சிலவாகும். 

தற்போது அமெரிக்கா இலங்கையின் ஆடை தொழிற்துறையில் முக்கிய கொள்வனவாளராக உள்ளது. அதேபோன்று இலங்கை தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட துறைகளின் அபிவிருத்திக்கும் தயாராக இருப்பதால் தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்ட தொழிற்துறைகளில் முதலீடு செய்ய தான் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் தெரிவித்தார்.