(எம்.மனோசித்ரா)

பொதுவான சின்னமொன்று குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்  என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் இணைந்த பரந்துபட்ட கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பர் . பசில் ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ சுதந்திர கட்சியின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிவார்கள் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அண்மையில் பொதுஜன எக்சத் பெரமுனவின் நிறைவேற்று குழு கூடியது. அதில் பரந்துபட்ட கூட்டணியின் சின்னம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

எனினும் ' ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தான (ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) ' என்ற பெயரில் புதிய சின்னத்தில் பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இவ்வாறு பொதுச் சின்னமொன்றில் ஒன்றிணைந்து பயணிப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். 

ஆனால் பொதுஜன பெரமுன கூறுவதைப் போன்று கூட்டணியில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால் அந்த கட்சிக்கான தனித்துவமான சின்னம் அற்றுப் போகும். இதனால் சுதந்திர கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 

காரணம் சுதந்திர கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த சந்தர்ப்பங்களில் கட்சியின் சின்னத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற பெயரில் வெற்றிலை அல்லது கதிரை சின்னத்திலேயே போட்டியிட்டது. எனவே நாம் சின்னம் தொடர்பில் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.