(செ.தேன்மொழி)

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவருக்கு அங்கத்துவம் வழங்கிமைக்காக ஐக்கிய தேசியக் கட்சி முழு சமூகத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால வெளிவந்துள்ள ரஞ்சனின் குரல் பதிவுகள் காரணமாக ஐ.தே.க.வெட்கிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

முன்னாள் இராஜங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நாட்டையும் , கலாச்சாரத்தையும் பாதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார். தேரர்களுக்கு எதிராக பெரும் விமர்சனங்களை மேற்கொண்டவர். தனது மதம் மட்டுமன்றி ஏனைய எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காதவர். இவ்வாறு செயற்படும் நபர்கள் எப்போதும் நிலைத்திருக்க மாட்டார்கள். இவரது குரல் பதிவுகள் நாட்டுக்கு பெரும் இழிவை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் தற்போது இழக்கப்பட்டுள்ளது.

ரஞ்சனின் குரல் பதிவுகளிலே குடும்பத்தினர் முன்னிலையில் கேட்க கூட முடியாத  வகையிலான சொற்பிரயோகங்கள் காணப்படுகின்றன. இவர் போன்ற ஒருவர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை பெற்று எம்முடன் சமமாக அமர்ந்திருப்பதை எண்ணி நாங்கள் கவலைப்படுகின்றோம். இவ்வாறான ஒருவருக்கு அங்கத்துவம் வழங்கிமைக்காக ஐ.தே.க. வெட்கிக்க வேண்டும். இதை விடுத்து அரசாங்கம் குரல் பதிவுகளின் மூலம் நடைமுறை விடயங்களை மூட முற்படுவதாக எம்மீது குற்றஞ் சாட்டுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவர்கள் எவ்வாறு இப்படி வெக்கமின்றி இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றார்கள்.

மேலும், ஐ.தே.க. அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஐ.தே.க.வின் மறைந்த அரசியல் தலைவர்கள் கூட சமாதிகளிலிருந்து கண்ணீர் சிந்துவார்கள் என்றார்.