(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் தொகுதி மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் தொகுதி மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் சுதந்திர கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்ககைள் முன்னெடுக்கப்படும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சில தொகுதிகளுக்கு இன்னும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படாமலிருக்கின்றனர். இவ்வாறு அமைப்பாளர்கள் நியமிக்கப்படாத தொகுதிகளுக்கு அமைப்பாளர்களை நியமித்து அடுத்த கட்டமாக பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

மேலும் பல்கலைக்கழக பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ சிறந்த முடிவுகளை எடுத்திருக்கிறார். தற்போது வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது. அதே போன்று எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும்.