இலங்கையுடனான ஆயுத ஒத்துழைப்புகளை தொடர ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இலங்கையுடன் தனது ஆயுத வர்த்தகத்தை தொடரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் செய்தியாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், சர்வதேச அரங்கில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றி ஆராயப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா எடுத்த முயற்சிகளுக்கு அளித்த ஆதரவுக்கு ரஷ்ய வெளிவிவகார  அமைச்சர் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ரஷ்யாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சியில் ரஷ்யாவும் இலங்கையை ஆதரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யா அளித்த ஆதரவுக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு துறைகளிலும் ஒப்புக் கொண்டன என்று அவர் கூறியுள்ளார்.

2018 இல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து இருதரப்பு வர்த்தகத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.