கொழும்பின் வட பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய கால்வாயான ஹமில்டன் (டச்சு கால்வாய்)  கால்வாயை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புனரமைப்பதற்கு  நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

"கால்வாயை நாங்கள் கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைப்போம், இது மிகவும் சாத்தியமான முயற்சியாகும்." ஹமில்டன் கால்வாய் ஐரோப்பாவில் உள்ள கால்வாய்களைப் போன்ற ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமில்டன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுப்புறம் பல்வேறு வகையான மீன், பறவைகள் மற்றும் தாவரங்களின் இருப்பிடத்தின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பகுதியாகும் மற்றும் உயிர்பல்வகைத்தன்மை நிறைந்த இடமாக காணப்படுகின்றது. 

இது சுற்றுச்சூழல்  சுற்றுலாபயணிகளை கவர்வதற்கு ஏற்றதாக அமைகிறது. "ஹமில்டன் கால்வாயைச் சுற்றி உள்ள நிலப்பகுதியை உணவகங்களையும் ஹோட்டல்களையும் அமைப்பதற்கு  முதலீட்டாளர்களுக்கு வழங்குவோம்." என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டமாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்  கொழும்பு கோட்டையிலிருந்து பயணிகள் படகு சேவையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு டச்சு அரசாங்கத்தின் உதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இத்திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சகம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை நில அளவைத் திணைக்களம், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மாகாண சபைகளும் இணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

14.5 கிலோமீட்டர் நீளமான ஹமில்டன் கால்வாய் (டச்சு கால்வாய்)  பிரித்தானியாவினால் 1802 - 1804 காலப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.