(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டுப் பிரிந்து உருவாக்கப்பட்ட புதிய கட்சிகள் எவையும் நிலைத்ததில்லை. அவ்வாறு எமது கட்சியிலிருப்பவர்கள் புதிய கட்சியை உருவாக்குவார்களாயின் அது எதிரணியின் சதித்திட்டமேயாகும். 

ஏனெனில் கட்சியைப் பிளவுபடுத்துவதற்காக எதிரணி நிதியளிப்பதன் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் வாக்குறுதிகளை வழங்குவதனூடாகவோ மாத்திரமே புதிய கட்சி உருவாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

உண்மையில் கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் பாரிய முரண்பாடுகள் எவையும் இருப்பதாக நான் கருதவில்லை. கட்சியில் தலைமைத்துவத்தை விடவும், அதன் யாப்பு மற்றும் கொள்கைத்திட்டம் ஆகியவையே முக்கியத்துவம் பெறுகின்றன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஒரு கட்சியின் தலைவர் இல்லையென்ற போதிலும், அவர் தேர்தலில் வெற்றி பெற்றமையை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

கட்சிக்குள் வெவ்வேறு கருத்துக்களும், நிலைப்பாடுகளும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியைவிட்டுப் பிரிந்து உருவாக்கப்பட்ட புதிய கட்சிகள் எவையும் நிலைத்ததில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு எமது கட்சியிலிருப்பவர்கள் புதிய கட்சியை உருவாக்குவார்களாயின் அது எதிரணியின் சதித்திட்டம் என்றே கூறவேண்டும்.

ஏனெனில் கட்சியைப் பிளவுபடுத்துவதற்காக எதிரணி நிதியளிப்பதன் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் வாக்குறுதிகளை வழங்குவதனூடாகவோ மாத்திரமே புதிய கட்சி உருவாகும். குறிப்பாக அண்மையில் அவிசாவளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பதவிக்காகக் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். எனவே அவர் கூறியபடி நடந்துகொள்வார் என்று நம்புகின்றேன்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாஸ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார். அதேபோன்று விரைவில் நாம் அமைக்கவிருக்கும் விரிவான கூட்டணிக்கு கரு ஜயசூரிய தலைமைதாங்கி வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் கட்சிக்குள் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.