(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டுள்ள  சீன,  ரஷ்ய  வெளிவிவகார அமைச்சர்களும், அமெரிக்க செயலாளர் ஆகியோரது  வருகை  நாட்டுக்கு  சாதாகமாகவே  அமையும்.   எவ்வித  நாடுகளுக்கும்  பாதிப்பினையும் ஏற்படுத்தாது நடுநிலையான  வெளிவிவகார கொள்கையினையே  அரசாங்கம்  தற்போது பினபற்றுகின்றது என   சர்வதேச உறவுகள்  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்   காரியாலயத்தில் நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு   ரஷ்ய  நாட்டு வெளிவிவகார  அமைச்சர்  சேர்ஜரி லவ்றவ்  நேற்று  ( திங்கட்கிழமை) இலங்கை  வந்துள்ளார். 

மறுபுறம்  சீனா  நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், தெற்கு,  மத்திய ஆசிய   விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச்செயலாளர் அலைஸ்  வெல்ஸ்  ஆகியோரும் நாட்டுக்கு  வந்துள்ளமை  கவனத்திற்குரியன.

 மூன்று  நாடுகளின் உயர்மட்ட  இராஜ தந்திரிகள்  இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமையானது  பல சாதகமான தன்மைகளை ஏற்படுத்தும்.  எந்த நாடுகளுக்கும் அடிபணியாமல் பொதுவான   வெளிவிவகார  கொள்கையினையே அரசாங்கம் தற்போது முன்னெடுத்து செல்கின்றது.   இது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அஸர்பைஜான்  சபாலி மாவட்டத்தில் தொடர்மாடி தீ விபத்தில் உயிரிழந்த   மூன்று  இலங்கை மாணவிகளின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான  நடவடிக்கை   ஈரான் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. இச்சம்பவம் குறித்து மாணவிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைதெரிவித்துக் கொள்ள வேண்டும்.  என்றார்.