ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ (Kozo Yamamoto) தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி பற்றிய ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ (Kozo Yamamoto) ஆகியோருக்கிடையே நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் முன்னேற்றமடைந்து வருகின்றது. இதனால் ஜப்பானிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த பின்னணி உருவாகியுள்ளதென ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், கைத்தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஜப்பான் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அந்த அனுபவங்களுடன் இலங்கையின் அபிவிருத்தி பயணத்திற்கு உறுதுணையாக செயற்பட முடியும் என ஜப்பான் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டிற்கு முன்னர் நாட்டில் நிலவிய 7 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளமையை ஜனாதிபதி, ஜப்பானிய இராஜாங்க அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதுடன், அதனைக் கட்டியெழுப்புவதே தான் எதிர்நோக்கியுள்ள முதன்மை சவாலாகும் எனத் தெரிவித்தார்.

உயர் தொழிநுட்பத்துடனான கைத்தொழில் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை எமது நாட்டிற்கு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ஜப்பான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜப்பானிய வர்த்தக சமூகத்தின் மத்தியில் இலங்கையின் நன்மதிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ தெரிவித்தார்.