(எம்.மனோசித்ரா)

19 ஆம் திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரத்தை தன்னகப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவதற்கான உள் நோக்கமும் இதுவே என எதிர்கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகின்றன.

இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் தற்போது அதிகார மோதலொன்று ஏற்பட்டுள்ளது.

இதனை அவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகக் காண்பிக்க முயற்சிக்கின்றனர். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரங்களையும் தன்னகப்படுத்திக் கொண்டு முழுமையான நிறைவேற்றதிகார ஜனாதிபதியாவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சிப்பதற்கான உள்நோக்கமும் இதுவேயாகும்.

ஜனாதிபதி கடைகளில் போய் அமர்ந்து கொள்வதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.