தமிழ் சமூ­கத்­தி­னதும் முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் ஆத­ர­வின்றி ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன பெரு­வெற்­றியைப் பெற்­றுக்­கொண்­டது. அக்­கட்சி இன்­னமும் கூட சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு நேசக்­க­ரத்தை நீட்­டு­வ­தற்­கான வெளிப்­ப­டை­யான எந்த முயற்­சி­யையும் மேற்­கொள்ள­வில்லை. 2020 ஏப்ரல் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்குப் பின்னர் அந்தச் சமூ­கங்­க­ளுடன் பொது­ஜன பெர­முன உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது சாத்­தி­ய­மென்று அதன் தலை­மைத்­து­வத்­துக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்கள் கூறின.

பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளுக்கு முன்­ன­தாக சிங்­கள வாக்­கா­ளர்­களை தங்­க­ளுடன் வைத்­தி­ருப்­ப­தற்­காக பொது­ஜன பெர­மு­னவும் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கமும் அவற்றின் கடும்­போக்கு சிங்­களப் பெரும்­பான்­மை­வாத நிலைப்­பாட்டை தொடர்ந்தும் கடைப்­ பி­டிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்றும் அந்த வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

தமி­ழர்­க­ளுடன் நல்­லி­ணக்கம் பற்றிப் பேசு­வதன் மூலமோ அல்­லது தமிழ்­பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்­கு­வ­தாக வாக்­கு­று­தி­களை வழங்­கு­வதோ அல்­லது தற்­போ­தைய தரு­ணத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் உற­வாடி அவர்­க­ளுடன் உடன்­பா­டு­க­ளுக்கு வரு­வதன் மூலமோ கடும்­போக்கு பெரும்­பான்­மை­வாத நிலைப்­பாட்டைத் தளர்த்­து­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய எந்த முயற்­சியும் பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்தின் அதி­ருப்­தியை மாத்­தி­ரமே சம்­பா­திக்கும் என்று பொது­ஜன பெர­முன அஞ்­சு­கி­றது. சிங்­கள சமூ­கத்­தி­ட­மி­ருந்து சற்­றேனும் எட்­டச்­செல்­வது பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் பொது­ஜன பெர­மு­னவின் வாய்ப்­புக்­களைப் பெரு­ம­ள­வுக்கு பாதிக்­கக்­கூடும்.

பாரா­ளு­மன்றத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்­ட­தொரு விட­ய­மாகும். ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஆதிக்கம் செலுத்­திய பிரச்­சி­னைகள் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் முக்­கி­ய­மற்­ற­வை­யாகப் போகலாம். பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் மாவட்­டங்­களின் அல்­லது தொகு­தி­களின் பிரச்­சி­னை­களும் வேட்­பா­ளர்­களின் தகு­தியும் மதிப்­புமே முக்­கி­யத்­துவம் பெறும். பொது­ஜன பெர­முன பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் நடை­பெ­ற­வி­ருப்­ப­தாக எதிர்­பார்க்­கப்­படும் நேரத்தில் ஆக 4 மாதங்கள் மாத்­தி­ரமே அதி­கா­ரத்தில் இருந்­தி­ருக்கும் என்ற போதிலும் பத­வி­யி­லி­ருக்கும் அர­சாங்கம் இயல்­பாக எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­க­ளையும் சமா­ளிக்க வேண்­டி­யி­ருக்கும்.

இந்தக் கார­ணிகள் பொது­ஜன பெர­மு­ன­வுக்குப் புதிய சவால்­களைத் தோற்­று­விக்கும். இந்தப் பின்­பு­லத்தில் அந்தக் கட்சி அத­னிடம் ஏற்­க­னவே இருப்­பதை- அதா­வது சிங்­களப் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை இழப்­ப­தற்கு விரும்­பப்­போ­வ­தில்லை. எனவே ஏப்­ரலில் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்­பு ­தினம் வரையா­வது பொது­ஜன பெர­மு­னவின் பல்­லவி “ஆயு­தப்­ப­டை­களின் கௌர­வத்தைப் பாதிக்­கக்­கூ­டிய வகையில் நல்­லி­ணக்கச் செயன்­மு­றைக்கு இட­மில்லை”, “அரசின் ஒற்­றை­யாட்சி கட்­ட­மைப்பை பாதிக்­கக்­ கூ­டிய வகையில் அதி­காரப் பர­வ­லாக்­க­லுக்­கான கோரிக்­கைக்கு விட்­டுக்­கொ­டுக்கப் போவ­தில்லை”, “தமிழ் தீவி­ர­வாத சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு விடு­தலை இல்லை” மற்றும் “ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணையின் பிர­காரம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைக்கு இட­மில்லை” என்­ப­தா­கவே இருக்கும்.

முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்­களின் இன­வாத மற்றும் தீவி­ர­வாத தலை­வர்­க­ளுடன் தொடர்பு வைப்­ப­தில்லை என்ற சுலோ­கத்­தையே பொது­ஜன பெர­முன உரக்­கச்­சொல்லும். கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு பின்­ன­ரான கால­கட்­டத்தில் முஸ்லிம் தலை­வர்­க­ளு­ட­னான உறவு மீதான வெறுப்பு அமைச்­ச­ர­வையில் எந்­த­வொரு முஸ்­லிமும் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டாத (பிர­தி­ய­மைச்­ச­ராகக் கூட இல்லை) அள­வுக்கு சென்­றி­ருக்­கி­றது.

அண்­மையில் கொழும்­பி­லுள்ள வெளிநாட்டு செய்­தி­யா­ளர்கள் சங்­கத்தின் உறுப்­பி­னர்­களை சந்­தித்த ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையைப் பொறுத்­த­வரை ஒரு மட்­டுப்­பாடு இருப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே எந்­த­வொரு முஸ்­லிமும் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறினார். ஆனால் அவ­ரது அந்தப் பதில் எந்த­வகை­யிலும் நம்­பிக்­கையைத் தர­வில்லை. குறைந்த­பட்சம் தற்­போ­தைக்கு எனினும் மித­வா­தி­க­ளான தனது சொந்தக் கட்­சியை சேர்ந்த பைஸர் முஸ்­தபா அல்­லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகி­யோ­ருடன் கூட சேரா­தி­ருப்­ப­தாகத் தென்­ப­டு­வது தனக்கு நல்­ல­தென்று ஜனா­தி­பதி உணர்ந்தார்.

சம­நி­லைப்­ப­டுத்தும் சக்­தி­யாக மஹிந்த
ஆனால் சிறு­பான்மை சமூ­கங்­க­ளி­ட­மி­ருந்து தூர­வி­லகி சிங்­கள மக்­களின் ஆத­ரவைத் தக்­க­வைக்கும் தந்­தி­ரோ­பா­யத்தை ஜனா­தி­பதி கோத்­த­பாய கடைப்­பி­டிக்கும் அதே­வேளை, அவ­ரது சகோ­த­ர­ரான பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் தொடர்பில் இருக்­கிறார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தமி­ழர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆழக்கால் பதித்த நிலைப்­பா­டு­களை கொண்­டி­ருப்­பதன் கார­ணத்­தினால் அவர்­களை மஹிந்த தவிர்த்து வரு­கின்ற போதிலும் கூட, கடந்த காலத்­தி­லி­ருந்து வேறு­பட்ட முறையில் பிரச்­சி­னை­களை நோக்­கவும் அவற்றைக் கையா­ளவும் வேண்டு­மென்ற யோச­னை­க­ளுக்கு இணங்கக் கூடி­ய­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தலை­வர்­க­ளுடன் அவர் தனிப்­பட்ட முறையில் சந்­திப்­புக்­களை நடத்­து­கின்­றனர்.

இந்தச் சிறு­பான்­மை­யின அர­சி­யல்­வா­திகள் மஹிந்­த­வு­ட­னான சந்­திப்­புக்கள் குறித்து மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்கள் போல் தெரி­கி­றது. பொது­ஜன பெர­மு­னவின் சில கடும்­போக்­கா­ளர்­களைப் போலன்றி மஹிந்த ராஜ­பக் ஷ விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறையின் கீழான பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறு­வ­தென்­பது சாத்­தி­ய­மா­ன­தல்ல என்­பதை அறிவார். வேறு­ப­டு­கின்ற ஆற்­றல்­களைக் கொண்ட பல வேட்­பா­ளர்­க­ளு­ட­னான மாவட்ட அடிப்­ப­டை­யி­லான தேர்­தலில் பல்­வேறு கார­ணிகள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன என்­ப­தையும் அவர் நன்கு அறிவார்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறு­வது ஒரு கானல் நீராக இருக்­கு­மே­யானால் கோத்­த­பாய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19 ஆவது திருத்­தத்தைக் கைவி­டு­வது என்ற யோச­னைக்கு மாற்­றுத்­தெ­ரி­வு­களைப் பற்றி சிந்­திக்க வேண்­டி­யி­ருக்கும். அதா­வது அந்தத் திருத்­தத்தில் ஒட்­டு­வே­லை­களை செய்து, நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி பத­வியைப் பலப்­ப­டுத்­து­வது குறித்தும் சுமு­க­மான நிர்­வா­கத்தை நடத்­து­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் குழப்­ப­நிலை­களைக் குறைப்­ப­தற்கு அதன் பிரி­வு­களில் பொருத்­த­மான சில மாறு­தல்­களை செய்­வது குறித்தும் மாத்­தி­ரமே அர­சாங்கம் எதிர்­பார்க்க முடியும்.

உண்­மையில் 19 ஆவது திருத்­தத்தை முற்று­மு­ழு­தாகக் கைவி­டாமல் அதை மேம்­ப­டுத்­து­வ­தற்கு பல காரி­யங்­களை செய்­ய­மு­டியும். அதை செய்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் கருத்­தொ­ரு­மிப்பு பெறு­வது சாத்­தி­ய­மா­னது. அந்த 19ஆவது திருத்­தத்தை முற்று­மு­ழு­தாகக் கைவி­டு­வது ஜன­நா­யக விரோ­த­மா­ன­தாகக் கரு­தப்­படும். எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அர­சாங்­கத்தைத் தாக்­கு­வ­தற்கு ஒரு கரு­வியைக் கொடுப்­ப­தா­கவும் இலங்­கையின் தாரா­ள­வா­தி­க­ளையும் மேலும் அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தா­கவும் அது அமையும்.

அர­சாங்­கத்­துடன் சேர்ந்து வாக்­க­ளிக்கக் கூடி­ய­வர்­களும் பிறகு ஒரு கட்­டத்தில் அமைச்­சர்­க­ளாக அர­சாங்­கத்தில் இணை­யக்­கூ­டி­ய­வர்­க­ளு­மான கிழக்கு மாகாண தமிழ்த் தலை­வர்­களை வளைத்துப் பிடிக்கும் முயற்­சி­க­ளிலும் மஹிந்த ராஜ­

பக் ஷ ஈடு­ப­டு­கிறார். அருண் தம்­பி­முத்து, வியா­ழேந்­திரன் எம்.பி. போன்­ற­வர்­களின் தலை­மை­யி­லான கிழக்குத் தமிழர் குழு­வொன்று இருக்­கி­றது. அது அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்சுப் பத­வி­களைப் பெறு­வது தங்­க­ளது மாகா­ணத்­தி­லுள்ள தமி­ழர்­களின் நலன்­க­ளுக்கு உகந்­தது என்று உணர்­கி­றது.

அர­சாங்­கத்தில் இணை­வதன் மூலம் ஆட்­சி­ய­தி­கார செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி நன்­மை­களைப் பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­ததன் மூலமும் முஸ்­லிம்கள் பெரு­ம­ள­வுக்கு சாதித்­தி­ருக்­கி­றார்கள் என்று கிழக்கு தமி­ழர்­களில் ஒரு பிரி­வினர் (அவர்கள் சிறிய எண்­ணிக்­கை­யி­ன­ராக இருந்­தாலும்) உணர்­கி­றார்கள். பொரு­ளா­தார ரீதி­யிலும் அர­சியல் ரீதி­யிலும் தமி­ழர்கள் ஓரங்­கப்­ப­டா­தி­ருக்க வேண்­டு­மானால் அவர்கள் அதி­கா­ரத்தின் கரு­வி­களைப் பயன்­ப­டுத்­தக்­ கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­ப­துடன், பாரா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயும் வெளியேயும் ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்­வதும் வீரா­வேச உரை­களை நிகழ்த்­து­வ­து­மான அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுடன் தங்­களைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ளக்கூடாது. உணர்ச்சிப் பர­ப­ரப்­புக்கு அப்பால் சென்றும் அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­களில் தமிழ் அர­சியல் அக்­கறை காண்­பிக்க வேண்­டிய நேரம் வந்­து­ விட்­டது.

அவ்­வா­றான அணு­கு­மு­றையை தமிழ் அர­சியல் சக்­திகள் கடைப்­பி­டிக்­கு­மே­யானால் தமி­ழர்­க­ளுக்கு நல்ல பணி­களைச் செய்­வ­தற்கு இந்­தி­யா­வுக்கும் அது உத­வி­யாக இருக்கும். கொழும்பின் நல்­லெண்­ணத்தைப் பெறு­வதன் மூல­மாக இலங்­கை­யு­ட­னான பொரு­ளா­தார உற­வு­களை வளர்ப்­பதில் அக்­கறை கொண்­டுள்ள புது­டில்லி தமிழ்­பேசும் வடக்கு, கிழக்கின் அபி­விருத்­திக்கு பங்­க­ளிப்பு செய்­வதில் பேரார்­வ­மாக உள்­ளது.

இந்­தி­யாவின் தற்­போ­தைய வெளியு­றவு அமைச்சர் எஸ்.ஜெய்­சங்கர் வெளியு­றவு செய­லா­ள­ராக இருந்­த­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேசி­ய­போது அவர்கள் தங்­க­ளது அர­சியல் கோரிக்­கை­க­ளி­லி­ருந்து பொரு­ளா­தாரக் கோரிக்­கை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வத்தை வழங்கும் வகையில் நகர்வை செய்­ய­வேண்டும். ஏனென்றால் அர­சியல் முனையில் மட்­டுப்­பட்ட அள­வி­லான செயற்­பா­டு­களை மாத்­தி­ரமே இந்­தி­யா­வினால் செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். தற்­போ­தைய சூழ்­நி­லை­களின் கீழ் இந்­தியா தன்னால் இயன்ற பணி­களை செய்­தி­ருக்­கி­றது. அதற்கு மேலும் எதையும் செய்­ய­மு­டி­யாது. கடந்த நவம்­பரில் ஜனா­தி­பதி கோத்­த­பாய டில்­லிக்கு விஜயம் செய்­த­போது பிர­தமர் நரேந்­திர மோடி செய்­ததைப் போன்று இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 13 ஆவது திருத்­தத்தின் கீழான அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு சுயா­தி­பத்­தியம் கொண்ட இலங்கை அர­சாங்­கத்­துக்கு வேண்­டு­கோளை மாத்­தி­ரமே இந்­தி­யா­வினால் விடுக்­க­மு­டியும். 1977 –- 1990 கால­கட்­டத்தில் இந்­திய இரா­ணு­வத்தை இலங்­கைக்கு அனுப்­பி­யும்­கூட அன்­றைய இலங்கை அர­சாங்­கத்தைக் கொண்டு அதைச் செய்ய முடி­யா­மற்­போன நிலையில், இந்­தி­யா­வுக்கு கொழும்பை பல­வந்­தப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்த வழியும் கிடை­யாது.

அதிகார சமநிலையில் நகர்வு
2020 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடும்போக்குடைய ஜனாதிபதி கோத்தபாயவை விடவும் கூடுதலான­ அளவுக்கு மிதவாதியாக இருக்கின்ற பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் கரங்களைப் பலப்படுத்தும் என்று பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான தமிழர்களில் ஒரு பிரிவினர் நம்புகிறார்கள். மஹிந்தவினதும் பசில் ராஜபக் ஷவினதும் தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறாவிட்டாலும் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்தவினதும் அவரது சகோதரர் பசிலினதும் தலைமையிலேயே தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் என்பதால் கடும்போக்குடைய ஜனாதிபதியிடமிருந்து கூடுதல் மிதவாதத்தன்மையும் நடைமுறைச் சாத்திய அணுகுமுறையும் கொண்ட மஹிந்தவின் தலைமையிலான பாராளு­­­­மன்றத்துக்கு அதிகார சமநிலை ஓரளவுக்கு நகரும். இத்தகையதொரு நிலை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை நோக்கிய அரசாங்கத்தின் கொள்கைகளில் உருமாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

(நியூஸ் இன் ஏசியா)