தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு நல்கி நாம் அமைச்சரவையில் அங்கம் வகித்தாலும் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ கொண்டு வரப்படும் எந்த தீர்மானத்துக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. நாம் எமது மக்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து எச்சந்தர்ப்பத்திலும் அக்கறையாகவே செயற்படுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டமூலம் தொடர்பில் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முழு விபரம் வருமாறு.
கேள்வி: சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகம் ஏற்படக்கூடிய வகையில் விஜேதாஸ ராஜபக் ஷ எம்.பியால் கொண்டு வரப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில்?
பதில்: தேர்தல் தொகுதி ஒன்றில் 12.5 வீத வாக்குகளை ஒரு கட்சி பெற வேண்டும் என்ற விடயம் ஒரு தனிநபர் பிரேரணையாகவே கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அது சட்டமாகவில்லையே அதற்கு ஏன் நாம் கவலைப்பட வேண்டும்? எனினும் இவ்விடத்தில் நான் ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் இருந்தாலும் எந்த வகையிலும் சிறுபான்மை பிரதிநிதித்துவத்துக்கோ அல்லது மக்களுக்கோ பாதகம் ஏற்படக்கூடிய எந்த நகர்வுகளையும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அதேவேளை, அரசாங்க பக்கம் இருந்து கொண்டு பேசும் அமைச்சர்களின் கருத்துகளுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருந்தால் இங்கு நாம் எமது பணிகளை முன்னெடுக்க முடியாது. அதை ஜனாதிபதி சொல்கிறாரா என்று தான் அவதானிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து என்ன கூறப் போகின்றீர்கள்?
பதில்: மறுபடியும் அதே பதிலைத்தான் கூறுவேன். எந்த இடத்திலாவது ஜனாதிபதி அவ்வாறு கூறினாரா? அரசாங்கம் பக்கம் இருக்கும் அமைச்சர்கள் அல்லது எம்.பிக்கள் கூறுவதெல்லாம் ஜனாதிபதி கூறியது என்று பொருள்படாது தானே. இதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. முரண்பாடுகளை ஏற்படுத்த சிலர் அவ்வாறு கூறலாம். சரி அவ்வாறு குறித்த சிலர் கூறி விட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பின் இந்த நாட்டில் தமிழர் பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதை எவரும் நிறுத்தி விட்டார்களா என்ன?
கேள்வி: அப்படியானால் மேற்குறித்த இரு விடயங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றால் இ.தொ.கா அது குறித்து குரல் எழுப்புமா?
பதில்: நிச்சயமாக. கடந்த காலங்களிலும் நாம் குரல் எழுப்பியுள்ளோம். அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றால் நாம் என்ன செய்கிறோம் என பொறுத்திருந்து பாருங்களேன்.
கேள்வி: இந்திய அரசாங்கத்தின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை அகதிகள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே?
பதில்: அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது பற்றிய பேச்சுக்கள், அழுத்தங்கள் இடம்பெற்று வருகின்றன. நாம் அதை அவதானித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். மட்டுமன்றி அவர்களின் விருப்புகளும் அறியப்படல் வேண்டும் என்பதில் அக்கறையாக இருக்கின்றோம். அது தொடர்பில் சரியான புள்ளி விபரங்களுக்காக காத்திருக்கிறோம். அதாவது சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அது தொடர்பான தகவல்களை தரும்படி கேட்டுள்ளோம். உண்மையில் எத்தனைப்பேர் தமிழகத்தில் இவ்வாறு இருக்கின்றனர் என்பதையும் அவர்களில் எத்தனைப்பேர் நாடு திரும்ப ஆவலாக இருக்கின்றனர் போன்ற விடயங்கள் பற்றியும் தகவல்களை சேகரித்து வருகின்றோம். அது தொடர்பான தரவுகள் இல்லாது பேச முடியாது.
கேள்வி: சில நேரங்களில் குடியுரிமை வழங்காது அந்த மக்கள் மறுபடியும் இலங்கைக்கு அனுப்பப்பட்டால்?
பதில்: அப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையுடன் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இதில் முழு இந்தியாவில் வாழும் மக்களின் நலன்களும் பார்க்கப்படும். தமிழகத்தில் குடியுரிமை இல்லாது வாழ்ந்து வரும் அகதிகள் மற்றும் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளி மக்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டதல்ல இந்த சட்டம். இதை உரியோர் புரிந்து கொள்ளல் அவசியம். அப்படியும் இவர்களுக்கு பாதகம் ஏற்படும் நகர்வுகள் ஏற்பட்டால் அது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடம் கதைப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆகவே இது குறித்து எவரும் கவலைப்பட தேவையில்லை.
கேள்வி: ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கமைய தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாள் சம்பளம் எப்போது கிடைக்கும்?
பதில்: எல்லாவற்றையும் ஒரே இரவில் எதிர்பார்த்தால் அது கடினமாகவே முடியும். அது குறித்து பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. தேர்தல் காலத்தில் அந்த ஆயிரம் ரூபாவை எவ்வாறு அரசாங்கம் பெற்றுக் கொடுக்கப் போகின்றது என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான், தேவையில்லாத வரிகள் குறைக்கப்படும் போது செலவீனங்கள் மட்டுப்படுத்தப்படும். அதன் போது இதை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்கள் இருக்காது என்று தெரிவித்திருந்தேன். அதன் படி ஜனாதிபதி சில வரிகளை குறைத்துள்ளார். அதை அனைவரும் அறிவர். அது போன்றே இந்த தொகையை பெற்றுக்கொடுப்பது பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று கூட கலந்துரையாடல்கள் நடைபெற்றன. ஆகவே இது குறித்து எவரும் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: கடந்த காலங்களில் பல ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டாலும் கூட மலையக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறதே?
பதில்: ஆமாம், முக்கியமான சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அதாவது ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானப்பாடங்களுக்கே இந்த பற்றாக்குறை நிலவுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கு நாம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம். அதாவது குறித்த பாடங்களை கற்பிப்பதில் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான தீர்மானமே அது. இது விரைவில் அமுல்படுத்தப்படும். அதேவேளை எதிர்காலத்தில் மீண்டும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படுவதற்கான திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம்.
கேள்வி: மலையகத்தில் பல கட்சிகள் தொழிற்சங்கங்கள் இருந்தாலும் அனைத்துமே ஒரே சமூக மக்களுக்காகத்தானே பணியாற்றுகின்றன, ஏன் அவை இணைந்து பணியாற்ற முடியாது?
பதில்: பணியாற்றலாமே. அதில் எந்த பிரச்சினைகளும் இல்லையே எம்மிடம் வந்தால் அது குறித்து பேசலாம்.
கேள்வி: இ.தொ.கா அதற்குத் தயாரா?
பதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது மலையகத்தின் பாரம்பரிய தொழிற்சங்கம். அதற்கென ஒரு கொள்கை உள்ளது. எமது செயற்திட்டங்களும் அப்படியானவை. ஆகவே எமது கொள்கைகளுக்கு இணங்கக் கூடியவர்கள் மட்டுமே எம்மோடு இணைந்து பயணிக்க முடியும். அது யாராக இருந்தாலும் சரி. அந்த கொள்கைகளானது மக்கள் சேவைகளையும் அவர்களுக்கான உரிமைகளையும் சரியான முறையில் பெற்றுக்கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. மட்டுமன்றி எமது அமைப்புக்கென்று சில கட்டுக்கோப்புகளும் உள்ளன. எனவே அதை புரிந்து தெரிந்து அதற்கேற்ப செயற்படக்கூடியவர்களே தற்போது அதனுடன் இணைந்து பயணிக்கின்றனர். ஆகவே நீங்கள் கூறும் அந்த ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் எமது கொள்கைக்கேற்ப இணைந்து செயற்பட விரும்பினால் தாராளமாக இணைந்து பணியாற்றலாம். அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
கேள்வி: மலையகத்துக்கான பல்கலைக்கழகம் பற்றிய நகர்வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
பதில்: ஆம். அது குறித்து உடன் நடவடிக்கைகளை எடுக்கும்படி ஜனாதிபதியே உத்தரவிட்டுள்ளார். கட்டமைப்பு பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதை நாம் கல்வித்துறை சார்ந்த குழுவினரிடமே ஒப்படைத்துள்ளோம். ஏனென்றால் இதிலும் அரசியலை புகுத்த சிலர் தயாராகவே இருக்கின்றனர். ஆகவே தான் சுயாதீனமாகவும் இது குறித்த ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை ஏற்படுத்தவும் எமது அமைச்சு அல்லாத பொதுவான இடத்தில் முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் தலைமையில் கல்விக்குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்தோம். அதில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர். எல்லோரினது கருத்துக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். ஆகவே இவ்விடயம் சாதகமாக பயணிக்கின்றது.
கேள்வி: ஜனாதிபதி கோத்தாபயவுக்கு தாமே அதிக வாக்குகளைப்பெற்றுக் கொடுத்ததாக சிலர் முகநூலில் பதிவிட்டு வருகின்றார்களே?
பதில்: அது மட்டுமா? தேர்தலில் வேலை செய்ததற்காக ஜனாதிபதி வழங்கினார் என யாரிடமோ வாங்கிப்பெற்ற வாகனத்தை ஓட்டிக்கொண்டு திரிகின்றார்கள் என்றும் எனக்கு முறைப்பாடுகள் வந்தன. இவர்களைப் போன்றவர்களை ஜனாதிபதி தனது அருகிலேயே எடுப்பதில்லை. நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர்கள் எங்கிருந்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள்? ஐந்து பத்து பேரை தன்னோடு வைத்துக்கொண்டு முகநூலில் அவர்களை வைத்து லைக்ஸ் போட்டுக்கொண்டிருப்பவர்களை எல்லாம் மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இவர்கள் எல்லாம் என்றோ மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். நான் இவர்களை கண்டதே இல்லை. நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.
கேள்வி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்திலா அல்லது தனித்தா போட்டியிடப் போகின்றீர்கள்?
பதில்: இன்னும் திகதியே அறிவிக்கப்படவில்லையே. இருந்தாலும் எதில் போட்டியிடுவது என்பது பற்றி நாம் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதை தேசிய சபையிடம் பொறுப்பு கொடுத்துள்ளோம். எந்த சின்னத்தில் யார் போட்டியிடுவார்கள் என்பதை அப்போது தான் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
கேள்வி: கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணம் உள்ளதா?
பதில்: அதையும் தேசிய சபை தான் முடிவு செய்யும். யாராவது வந்து எம்முடன் கதைத்தால் அது குறித்து பார்க்கலாம். அதுவும் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று காங்கிரஸின் கொள்கைகளோடு ஒத்து போகக் கூடிய அவற்றை ஏற்றுக்கொண்டு எம்முடன் செயற்படக் கூடியவர்களையே நாம் இணைத்துக் கொள்வோம்.
நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM