(எம்.மனோசித்ரா)

ஐ.தே.க. 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் பலமான அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சி செய்ய முடியாமல் போனது. அதே போன்று அவர்களால் பலமான எதிர்க்கட்சியாகவும் செயற்பட முடியாது. எனவே அதற்கு மாற்று வழியாக மக்கள் விடுதலை முன்னணியை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 

அத்தோடு பொதுத் தேர்தலிலும் சிவில் அமைப்புக்களுடனும் தொழிற்சங்கங்களுடம் இணைந்து செயற்படும் நோக்கம் மாத்திரமே இருப்பதாகவும் எந்தவொரு அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது பிரிதொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கான நோக்கமோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பொதுத் தேர்தலுக்கு ஜே.வி.பியின் ஆயத்தங்கள் குறித்தும், பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 

1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐ. தே.க விற்கு பலமான அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அதே போன்று அவர்களால் பலமான எதிர்க்கட்சியான செயற்படவும் முடியாது. எனவே பலமானதொரு எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான கடமையும் பொறுப்பும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இருக்கிறது. 

கிராம மட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அதே சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்துள்ளோம். இது வரையில் சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராம மட்டத்திலான மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

இம்முறை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியிலும் மக்கள் விடுதலை முன்னணி என்ற ரீதியிலும் பெருமளவிலான உறுப்பினர்களை களமிறக்கி வெற்றி பெறும் நோக்கத்திலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி என்ற சிவில் அமைப்புக்களுடனான பரந்துபட்ட கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணி பிரதான கட்சியாக இருக்கும். 

ஜனாதிபதித் தேர்தலின் போது எம்முடன் கைகோர்த்த அனைத்து சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்தே பொதுத் தேர்தலிலும் களமிறங்கவுள்ள நிலையில்,  மாறாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து கூட்டணி அமைப்பதற்கோ அல்லது ஆதரவு வழங்குவதற்கோ நாம் தயாராக இல்லை என்றார்.