(இராஜதுரை ஹஷான்)

தமிழ் - முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஐ.தே.க.வின் நிலைப்பாடு என்னவென்பதை  சரத் பொன்சேகாவின் கேள்வியினூடாக அறிந்துக் கொள்ள முடியும். தமிழ்  மக்கள் இனியாவது அரசியல் ரீதியில்  சரியான  தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என  அபிவிருத்தி வங்கிகள் மற்றும்  கடன் வசதி இராஜாங்க  அமைச்சர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தமிழ்- முஸ்லிம் மக்களை ஆதரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஐ.தே.க. ஆரம்ப  காலத்தில் இருந்து அவர்களுக்கு எதிராக   அடக்குமுறைகளையே கட்டவிழ்த்துள்ளது. தேசிய புலனாய்வு  பிரிவின் அதிகாரியாக  முஸ்லிம் ஒருவரை எவ்வாறு   நியமிக்க முடியும் என்று  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  எழுப்பியுள்ளார்.  அரசாங்கம் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.  தகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டே நியமணங்கள் தற்போது இடம் பெறுகின்றன.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில்   பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பாலான  தமிழ்- முஸ்லிம் மக்களின்   வாக்குகள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு கிடைக்கவில்லை. தனி பௌத்த சிங்கள  வாக்குகளினால் மாத்திரம் அவர்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. 69  இலட்ச வாக்குகளின்  தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவும் கணிசமான அளவு காணப்படுகின்றன.

ஒரு  நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின்  வாக்குகளையும் பெற்று  ஒருவர் ஜனாதிபயாக தெரிவு செய்ய முடியாது. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் அவர்   அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக செயற்பட வேண்டும். இதனை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  தனது பதவி பிரமாணத்தின் போது நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் இந்நாள்  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஆகியோரது ஆட்சி காலம்  தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு  எதிரானது என்று  ஐ.தே.க.வினர் ஆரம்ப  காலத்தில் இருந்து தவறான  சித்தரிப்பினை தோற்றுவித்துள்ளார்கள்.இதற்கு   தமிழ் தேசிய  கூட்டமைப்பும்  உரிய  பங்களிப்பினை  வழங்கியது.

ஒரு  இனத்தின் விடுதலைக்காக மாத்திரம் பயங்கரவாத யுத்தம் முடிவிற் கு கொண்டு வரவில்லை. அனைத்து இன மக்களின்  எதிர்பார்ப்புக்களும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில்  இருந்தது.  30 வருடகால யுத்தம் தோற்றம் பெறுவதற்கு ஐ.தே.க.வே வித்திட்டது.  மறுபுறம்  ஆரம்ப  காலத்தில் இருந்து தமிழ்-முஸ்லிம்  எதிரா க  ஐ.தே.க.வினரே இன அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில்  தமிழ் மக்களுக்கு   அரசியல் ரீதியில் எவ்விதமான   உரிமைகளும் கிடைக்கப் பெறவில்லை. கூட்டமைப்பினர்  தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.  தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து   எவ்வித  உரிய தீர்வும் கடந்த அரசாங்கம்  பெற்றுக் கொடுக்கவில்லை.

எங்களை இனவாதிகள் என்று குறிப்பிட்டவர்கள் இன்று  இனவாத கருத்துக்களை  குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். தேசிய புலனாய்வு பிரிவின்  அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை  எவ்வாறு    நியமிக்க முடியும் என்று  சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளமை ஐ.தே.க.வின் உண்மை தன்மையினை  வெளிப்படுத்தியுள்ளது.   இனியாவது  தமிழ்- முஸ்லிம் மக்கள்   உண்மை தன்மையினை  புரிந்துக் கொண்டு அரசியல் ரீதியில்  சிறந்த தீர்மானத்தை மேற்கொள்ள  வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.