சிவனொளிபாதமலை பருவகால யாத்திரைக்கு சென்ற 20 இளைஞர்கள் போதைப்பொருளுடன் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10) மாலை 04.30 மணியளவில் குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.