பிபிசி

தமிழில் வீரகேசரி இணையம்

மேற்குலக நாடுகள் உக்ரைன் விமானம் ஏவுகணை தாக்குதலிற்கு உள்ளானது என தெரிவிக்கின்றன.

ஈரான் இதனை நிராகரித்துள்ளது.

ஆகவே என்ன ஆதாரங்கள் உள்ளன

வீடியோ ஆதாரங்கள் என்ன ?

ஈரானின் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் விமானம் நிலைகுலைந்த தருணத்தை காண்பித்துள்ளன.

சிறிய வெளிச்சமொன்று தோன்றுவதையும் பின்னர் சத்தமொன்று கேட்பதையும் அந்த வீடியோ காண்பித்துள்ளது.

அதன் பின்னர் விமானம் பறக்கும் திசையை மாற்றி டெஹ்ரானை நோக்கி பயணிக்க முற்படுகின்றது.

அதன் பின்னர் அந்த விமானம் நிலத்தில் விழுந்து நொருங்குகின்றது.

குறிப்பிட்ட வீடியோ எடுக்கப்பட்ட இடம் டெஹ்ரானில் பொதுமக்கள் அதிகமாக வாழும் பரன்ட் என்பதை பிபிசி கண்டுபிடித்துள்ளது.

இந்த பகுதி விமானம் புறப்பட்ட விமானநிலையத்திலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்களில் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?

விமானத்தின் சிதைந்த பாகங்களை காண்பிக்கும் பல படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்களையும் சிதைவுகளையும் உன்னிப்பாக ஆராய்ந்தால் பல முக்கிய ஆதாரங்கள் கிட்டலாம்,தீப்பிடித்தமைக்கான அடையாளங்கள், ஏவுகணையின் சிதறல்கள்  போன்றவற்றை கணடு;பிடிக்கலாம்.

விமானஎதிர்ப்பு ஏவுகணைகள் வழமையாக இலக்கிலிருந்து தொலைவில் வைத்து பயன்படுத்தக்கூடிய விதத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. 

உள்பக்கமாக  துளைகள் காணப்படும் பட்சத்தில் அதனை அடிப்படையாக வைத்து வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் அல்லது சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு வரமுடியும்.

துளைகளின் அளவை அடிப்படையாக வைத்து என்னவகையான ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்ற முடிவிற்கு வரலாம்.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் படங்களை ஆராயமுடியாத நிலை காணப்படுகின்றது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் படங்களை எவரும் சுயாதீனமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தவில்லை,இந்த படங்கள் எப்போது யாரால் எடுக்கப்பட்டவi என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

ரஸ்யாவின் டோர் ஏவுகணைகளின் முன்பகுதி காணப்படுவதாக சில படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்களில் ஏன் ஏவுகணையின் முன்பகுதி சேதமடையாமல் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் இந்த விடயங்களில் நிபுணத்தும் பெற்ற ஒருவர் குறிப்பிட்ட பகுதி வழிகாட்டும் பொறிமுறைகளை உள்ளடக்கியது அது ஏவுகணையுடன் சேர்ந்து வெடிக்காது என குறிப்பிடுகின்றார்.

விமானம் விழுந்த பகுதியை ஈரான் சுத்தம் செய்துவிட்டதாகவும் சிதைவுகளை அகற்றி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன இதனால் சமூக ஊடக படங்கள் மிக முக்கியமான ஆதாரங்களாக காணப்படுகின்றன.

கறுப்பு பெட்டிகள்

இரண்டு கறுப்பு பெட்டிகள் உள்ளன.விமானத்தின் அமைப்பிற்குள் நடக்கும் அனைத்தையும் விமானதரவு பதிவுக்கருவி பதிவு செய்கின்றது.விமானத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தால் இதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

குரல் பதிவு சாதனம் விமானவோட்டிகளின் பகுதிக்குள் இரண்டு மணிநேரம் இடம்பெறும் விடயத்தை பதிவு செய்யக்கூடியது.விமானவோட்டிகளின்  உரையாடல்களை பதிவு செய்யும் இந்த சாதனம் மிக முக்கியான தகவல்களை கொண்டிருக்கும்.

கறுப்பு பெட்டியில் பதிவு செய்யப்பட்டுள்ள விடயங்களை தரவிறக்கம் செய்வதற்கு இரண்டுமாதங்களாகும் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குண்டுவெடிப்பு அல்லது எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றனவா என்பதை கறுப்புபெட்டிகள் ஒரளவிற்கே வெளிப்படுத்தும் என்பதும் முக்கியமானது.

கறுப்புபெட்டிகள் இயங்க மறுக்கலாம் ஆனால் குரல் பதிவு செய்யும் சாதனம் ஒலி அலைகளை பதிவு செய்திருக்கும்.

சில விமானவிபத்துகள் குறித்த விசாரணைகள் பல வருடங்கள் நீடிக்ககூடியவை. 2010 இல் இடம்பெற்ற எத்தியோப்பிய விமானவிபத்து குறித்த விசாரணை ஏழு வருடங்கள் நீடித்தது.