இலங்கை அணிக்கெதிரான  இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு -20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றிபெற்று, இருபதுக்கு - 20 தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள்  தொடரையும் இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் பல்லேகலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.


அந்தவகையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தித்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில்  6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப்பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிளட்சர் 23 ஓட்டங்களையும் சார்ள்ஸ் 34 ஓட்டங்களையும் ராம்தின் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்க மற்றும் சிறிவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்க 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டில்ஷான் 52 ஓட்டங்களையும் செஹான் ஜயசூரிய 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பிராவோ 4 விக்கெட்டுகளையும் ராம்போல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராவோ தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.