(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹூமான் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு கட்சித்தலைவர் வருகையளிக்காமை தொடர்பில் தம்மால் எந்த கருத்தும் கூறமுடியாது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வுகளில் கட்சிப்பிரமுகர்கள் பலர் கலந்துக் கொண்டிருந்த போதும் கட்சி தலைவர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் சிலர் வருகைத்தராமை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கட்சித்தலைவர் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

இன்றைய தினம் சமய ஆராதனை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெற்றிருந்தது. வேறு எந்த முக்கியமான விடயங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கூட சிலவேளை அவர்கள் வருகைத்தராமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர்கள் வருகை தந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

நேற்றய தினம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது எந்த தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட வில்லை. எதிர்வரும் வியாழக்கிழமையும் மீண்டும் செயற்குழு கூட்டமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளோம். இதன் போதே கட்சித் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.