நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுபவத்தினையும் உதவிகளையும் வரவேற்பதாகவும் குறுகிய காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பில் அபவிருத்தியடைந்த பங்களாதேஷின் செயற்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக விரைவில் பங்களாதேஷிற்க்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சிற்கு இன்று வருகைதந்த பங்களாதேஷின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் றியாஷ் ஹாமிதுல்லாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ வடக்கு கிழக்கு பிரதேசங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற நீர்நிலைகளில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றிக் கொள்ள முடியும் எனவும் வீட்டுத் தோட்டங்களைப் போன்று நன்னீர் மீன் வளர்ப்பையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவன் மூலம் பெண்களையும் கணிசமானளவு நன்னீர் மீன் வளர்ப்பில் ஈடுபடுத்த முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் குறித்த சந்திப்பின்போது நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பங்களாதேஷ; உயர்ஸ்தானிகர்,  நன்னீர் மீன் வளர்ப்பில் உலளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தில் பங்களாதேஷ் இருப்பதாகவும் நாட்டில் இயற்கையாக காணப்படுகின்ற நீர்நிலைகளை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக நெற்செய்கைக்கு பயன்படுத்துகின்ற நீரை தேக்கி வைத்து அதனை நன்னீர் மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தும் பொறிமுறையை பின்பற்றுவதன் மூலம் பாரிய வெற்றியடைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

மேலும்இ பங்களாதேஷை விட அதிகளவான நன்னீர் நிலைகள் இலங்கையில் காணப்படுகின்ற நிலையில் அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் குறுகிய காலத்தில் பாரிய மாற்றத்தை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில், நன்னீர் மீன் வளர்ப்பு தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான ஏது நிலைகள் தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன் அதுதொடர்பான மேலதிக விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றை முடிந்தளவு விரைவில் ஒழுங்குபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு