(இராஜதுரை ஹஷான்)

நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய   எக்கட்சினாலும் தனித்து அரசாங்கத்தை அமைக்க முடியாது.

பலமான மற்றும் நிலையான பாராளுமன்றம் தோற்றம் பெற வேண்டுமாயின் தேர்தல் முறைமை திருத்தியமைக்க்கவோ அல்லது மாற்றியமைக்கவோ வேண்டும் என  நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் போட்டித்தன்மையும், அரசாங்கத்தின்  நிலையற்ற  தன்மைக்கும் பிரதான காரணம் ஒரு கட்சி தனித்து அரசாங்கத்தை தோற்றுவிக்காமையே அதற்கு நடைமுறையில் உள்ள தேர்தல்   முறைமை மூல காரணியாக காணப்படுகின்றது. இது 1988 ம் ஆண்டு தொடக்கம் செல்வாக்கு செலுத்துகின்றது.

இடம் பெற்று முடிந்த 7 பொதுத்தேர்தல்களில் இரண்டு தேர்தல்களில் மாத்திரமே தனி கட்சி பலமான அரசாங்கத்தை தோற்றுவித்தது.  2010ம் ஆண்டுக்கு பிறகு  பிறிதொரு கட்சியின் ஆதரவுடனே  அரசாங்கத்தை அமைக்கும் பலவீனுமான தன்மை அனைத்து கட்சிகளின் மத்தியிலும்  காணப்படுகின்றது.

விகிதாசார முறைமையின் சாதக தன்மையுடன் மக்களின்  பிரதிநிதிகள் நேரடியாக  தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

பாராளுமன்ற அக்கிராசன உரையில் அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முறைமை திருத்தம் உள்ளிட்ட  இரு விடயங்கள் தொடர்பில் அழுத்தமான உரையினை அவர் நிகழ்த்தியிருந்தார்.

அரசியலமைப்பு மாற்றம் ,தேர்தல் முறைமை திருத்தம் ஆகிய இரு  பிரதான விடயங்களையும் அடியொற்றியதாகவே பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ இரு தனிப்பட்ட பிரேரணைகளை  பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்இவ்விரு பிரேரணைகளிலும்  அரசியல் இலாபங்களை விடுத்து பொது விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து  ஆராய வேண்டியது அவசியமாகும்.

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் அனைவரது கவனமும் இன்று காணப்படுகின்றது.

தேர்தலில் வெற்றிப் பெறுவது இரண்டாம் பட்ச  விடயம். ஆனால் அதற்கு முன்னர் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் பல உள்ளன.   அடிப்படைவாதிகள், மற்றும்  சுயநலவாதிகளின் ஆதரவு  இல்லாமல்   பலமான அரசாங்கத்தை  ஒரு  தனி கட்சி தோற்றுவிக்க வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை திருத்தியமைக்கப்பட  வேண்டும்.

நடைமுறையில் உள்ள  தேர்தல் முறைமைகளுடன் அரசாங்கம் பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்றாலும்  பலமான அரசாங்கத்தை  அமைக்க முடியாது. 

முரண்பாடுகளே  தொடர்ந்து  ஏற்பட்டதாக இருக்கும். தேர்தல் முறைமையில் உள்ள குளறுபடிகள் தொடர்பில்  எதிர்தரப்பினரும்  நன்கு அறிவார்கள் .தேர்தல முறைமையினை திருத்த  அரசாங்கம்   நிபந்தனைகளற்ற  பேச்சுவார்த்தையினை  துரிதமாக முன்னெடுக்கும் என்றார்.