இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு புனேயில் ஆரம்பமாகவுள்ளது.

லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது.

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் மூன்றாவது போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. 

இந் நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவதும் மற்றும் இறுதியுமான போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்றிரவு நடக்கிறது. 

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி இந்தூர் ஆட்டத்தில் ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பிய காரணத்தினால் 142 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சிலும் மலிங்கா 4 ஓவர்களில் 41 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதேவேளை சலகதுறை ஆட்டக்காரரான இசுறு உதனா காயத்தால் விலகி இருப்பது இலங்கைக்கு மற்றொரு பின்னடைவாகும். 

ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அவர்களால் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும். கடந்த ஆட்டத்தில் அணியில் இணைத்துக் கொள்ளப்படாத மெத்தியூஸ் இந்த ஆட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்பும் உள்ளது.

இப் போட்டி குறித்து இலங்கை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில்,

‘மிகவும் திறமையான வீரர்கள் எங்களது அணியில் உள்ளனர். அவர்களுக்கு ஆட்டத்தின் போக்கு, வியூகம், சூழலை சமாளிப்பது ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளது. எப்போது ரிஸ்க் எடுத்து ஆடுவது, எப்போது நிதானம் காட்டுவது என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தடுமாற்றமின்றி தொடர்ந்து ஒன்று, இரண்டு ஓட்டங்கள் வீதம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

2 ஆவது ஆட்டத்தில் இலங்கையை 142 ஓட்டங்களில் கட்டுப்படுத்திய இந்திய அணி அந்த இலக்கை எளிதில் எட்டிப்பிடித்தது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி மிரட்டிய நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி அனைவரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி பரிசோதனை முயற்சியாக இன்றைய ஆட்டத்தில் மனிஷ் பாண்டே அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். 

மற்றபடி வலுவான நிலையில் காணப்படும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி, தொடரை கைப்பற்றுவதில் தீவிர முனைப்புடன் உள்ளார்கள்.