( ஆர்.யசி)

ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியது.

தற்பொழுது ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவ முரண்பாடுகள் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் குறித்த  விவகாரத்திலும் கட்சிக்குள் முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில் விசேடமான இந்த விடயங்கள் குறித்து ஆராய அவசர  பாராளுமன்ற குழு கூட்டம் இன்று கூடியது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் குறித்த விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என  எதிர்க்கட்சி தலைவருடன் கைக்கோர்த்துள்ள ஒருசாரார் வலியுறுத்தி வருகின்ற நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என கட்சிக்குள்ளே  பிறிதொரு  தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இடம் பெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த யோசனைகளுக்கு மேலதிகமாக தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக நியமிக்குமாறும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருப்பார் எனவும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்பட முடியும் எனவும் ஒரு யோசனையை  முன்வைத்துள்ளனர். 

எனினும் ஐக்கிய தேசிய கட்சியினதும், முன்னணியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸவிற்கே வழங்க வேண்டும் என சஜித் அணியினர் விடாப்பிடியாக கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் இது குறித்து செயற்குழு கூட்டத்தில்  வாக்கெடுப்பு ஒன்றினை  நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய பாராளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டமும், கட்சியின் செயற்குழு கூட்டமும் எதிர்வரும் 16ம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய குழப்ப நிலைகள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் தேவைப்படும் பட்சத்தில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தின் போது பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் இன்றைய பாராளுமன்ற குழு கூட்டத்தில்  ரஞ்சன் ராமநாயக்க  எம். பி கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.