பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்படும்போது அவர்களுடைய கௌரவம் மற்றும் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் பொருத்தமான நடைமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தினர்.

எந்தவொரு அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறிழைத்திருந்தால் அவர் கைதுசெய்யப்பட்டாலும், இதற்குப் பொருத்தமான நடைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், பொலிஸ் அதிகாரிகளுக்கு அதுபற்றி வழிகாட்டலொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினர்.

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

இக்கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பதில் பொலிஸ் மாஅதிபர் எஸ்.டி.விக்ரமரட்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

சபாநாயகரின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால.டி.சில்வா, அநுர பிரியதர்ஷனயாப்பா உள்ளிட்ட ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.