திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர், காதலன், மற்றும் வயோதிபர் மூவரையும் இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்னிலையில் இன்று (09)  மாலை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள்  அதே பிரதேசத்திலுள்ள 19 வயதுடைய காதலனும்,  41 வயதான  ஆசிரியரும், 55 வயதுடைய வயோதிபருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சிறுமியின் தந்தை சிறு வயதில் உயிரிழந்த நிலையில் தாயார் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்ற நிலையில் சிறுமி தனது தாதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் 19 வயதுடைய இளைஞர் அச்சிறுமியை காதலித்து வருகின்ற நிலையில்  மொரவெவ 06ம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 55  வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தனிமையில் வீட்டில் இருந்த சிறுமியை பயமுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 55 வயதுடைய வயோதிபரை கைது செய்ததுடன் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். 

இவ்வாக்குமூலத்தில் தான் பாடசாலைக்கு பின்னேர வகுப்பிற்காக சென்றபோது தனது ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் இதனை அடுத்து தனது காதலர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மூவரையும் கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே எதிர்வரும் 21 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

 பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்