எனக்கு சிங்­கள ராஜ்­ஜியமோ, தமிழ் ராஜ்­ஜியமோ, முஸ்லிம் ராஜ்ஜி­யமோ வேண் டாம். இலங்கை ராஜ்­யமே வேண்டும். நான் முதலில் ஒரு இலங்­கையன். அப்­பு­றம்தான் தமிழன். ஆனால், நீங்கள் முதலில் யார்? நீங்கள் இந்த நாட்டில் ஒரு சிங்­கள பெளத்த ராஜ்ஜி­யத்தை கட்டியெழுப்ப முயல்­கி­றீர்கள் என்ற அறி­கு­றிகள் தெளி­வாகத் தெரி­கின்­றன.சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய இலங்கை ராஜ்ஜி­யத்­தையா அல்­லது சிங்­கள பெளத்த ராஜ்ஜி­யத்­தையா நீங்கள் இந்த நாட்டில் உரு­வாக்க விளை­கி­றீர்கள் என்று எனக்கு பதில் கூறுங்கள் என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்ற தனியார் தொலைக்­காட்சி அர­சியல் விவா­தத்தில், தனி­நபர் பிரே­ரணை மூலம் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்­களை குறைக்கும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 21ஆம் திருத்­தத்தை கொண்­டு­வந்­துள்ள அர­சாங்க எம்.பி. விஜே­தாச ராஜ­பக் ஷ­விடம் கேள்வி எழுப்­பினார்.

நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு கடந்து, சிங்­கள மொழியில் நடை­பெற்ற இந்த விவா­தத்தில் ஜே.வி.பி.எம்.பி. நளின் ஜய­திஸ்ஸ,  ஐ.தே.க. எம்.பி. முஜிபுர் ரஹுமான், பொது­ஜன பெர­முன எம்.பி. விஜே­தாச ராஜ­பக் ஷ­ ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இந்த நாட்டில் இனங்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம் இல்­லாமல் இருப்­ப­தற்கு சிறு­பான்மை கட்­சிகள் இருப்­பதே காரணம் என்று கூறு­கி­றீர்கள்.  ஆகவே தேர்தல் வெட்­டு­புள்­ளியை உயர்த்தி சிறு கட்­சி­களை இல்­லாமல் செய்ய வேண்டும் என்­கி­றீர்கள். இன்று இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் இல்லை என்­பது மெத்த சரி. அது ஒரு நோய். ஆனால், அந்த நோய்க்கு நீங்கள் சொல்லும் மருந்­துதான் பிழை­யா­னது.

நல்­லி­ணக்கம் இல்­லாமல் போன­தற்கு இந்­நாட்டு பெரும்­பான்மை கட்­சிகள் சிறு­பான்மை மக்­களை அர­வ­ணைக்க தவ­றி­யதே காரணம். அத­னால்தான் வேறு வழிகள் இல்­லாமல், சிறு­பான்மை கட்­சிகள் உரு­வா­கின. சிங்­களம் மட்டும் என்று 1950களில் இன­வா­தத்தை மைய­மாக கொண்டு பெரும்­பான்மை அர­சி­யல்­வா­திகள் அர­சியல் செய்ய புறப்­பட்­ட­தா­லேயே, சிறு­பான்மை கட்­சிகள் உரு­வாக வழி ஏற்­பட்­டது. இதனால், சுமார் 70 வரு­டங்கள் இந்­நாடு இருளில் இருந்­                தது. 

மிகவும் பிர­யா­சைப்­பட்டு அதை மாற்ற நாம் முயன்று வரும்போது, மீண்டும் அதே பழைய இருளை நோக்கி நீங்கள் இந்­நாட்டை பின்­னோக்கி கொண்டு செல்ல முயல்­கி­றீர்கள். அதா­வது வர­லாற்றிலிருந்து இன்­னமும் நீங்கள் பாடம் படிக்­க­வில்லை என்று எனக்கு புல­னா­கி­றது.

இந்­நாட்டில் இப்­போது, தமிழ் பேசும் மக்கள் தமது தாய்­மொ­ழியில் தமது தாய்­நாட்டை உணர்­வோடு, “தாயே” என தேசிய கீத­மாக பாட முடி­யாத நிலை­மைக்கு நீங்கள் கொண்­டு­வர முயல்­கி­றீர்கள். இதுதான் இன்­றைய யதார்த்தம். இந்த நிகழ்ச்­சியை பார்த்­துக்­கொண்டிருக்கும், இந்­நாட்டின் இன்­றைய ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், அரச எம்.பி.க்கள் ஆகியோர் இதை­யிட்டு வெட்கி தலைகுனிய வேண்டும்.     

இதுதான் பிரி­வினை. சிறு­பான்மை இனங்­களை ஒதுக்கி வைப்­ப­துதான் பிரி­வினை. ஒரே நாட்டை உரு­வாக்க வேண்டும் என்றால், இந்­நாட்டில் வாழும் எல்லா இனங்­க­ளுக்கும், மொழி­க­ளுக்கும், மதங்­க­ளுக்கும் அங்­கீ­காரம் தரு­வதன் மூலமே அதை செய்ய முடியும் என்­பதை உண­ருங்கள்.       

இந்­தி­யாவில் சிறு­பான்மை சீக்­கிய இனத்தை சேர்ந்த மன்­மோகன் சிங் பிர­தமர் ஆக முடியும். அப்துல் கலாம் என்ற முஸ்லிம் ஜனா­தி­பதி ஆக முடியும். இங்கே லக் ஷ்மன் கதிர்­காமர் கூட பிர­த­ம­ராக முடி­யாது. இங்கே இன­வாதம் உள்­ளத்தில் ஆழ­மாக ஊறி விட்­டது. அதை நீங்கள் இன்­னமும் வளர்க்­கி­றீர்கள்.

இன்று உள்ள தேர்தல் சட்­டத்தை திருத்த நாமும் தயார். ஆனால், எப்­படி திருத்­து­வது? இப்­படி வெட்­டுப்­புள்­ளியை உயர்த்தி சிறு கட்­சி­களை ஒழிப்­பதன் மூலம் அல்ல. அது இருக்கும் நிலை­மையை இன்­னமும் மோச­மாக்கி விடும். இது சிறு­பான்மை கட்­சி­களை மட்­டு­மல்ல, அனைத்து சிறு கட்­சி­க­ளையும் பாதிக்கும். எம்மைவிட ஜே.வி.­பி.யை அதிகம் பாதிக்கும். அரசிலுள்ள ஈ.பி.டி.­பி.யை பாதிக்கும். கடந்த காலங்­களில் ஆயுதம் தூக்கிவிட்டு, பின் அவற்றை கைவிட்டு, பாரா­ளு­மன்ற பாதையை தெரிவு செய்­த­வர்­களை பார்த்து மீண்டும் ஆயுதப் போருக்கு செல்லுங்கள். காட்­டுக்குள் செல்லுங்கள். பங்­க­ருக்குள் செல்லுங்கள் என்று சொல்­லு­கி­றீர்கள். வர­லாற்றிலிருந்து பாடம் படிக்கவும் மாட்டீர்கள். இலங்கை ராஜ்ஜியம் என்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கையும் நிராகரிப்பீர்கள். ஆனால், நாம் எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்த எமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமையையும் கைவிட வேண்டும். இது என்னய்யா நியாயம் எனக் கேள்வி எழுப்பினார்.