அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7.15 மணியளவில்   கல்முனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த தனியார் பஸ்ஸை வழிமறித்து பஸ்சாரதி ,நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரை இன்று கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த சாரதி ஏ.அஸ்ஹர் ( 37 வயது), நாவிதன்வெளி அன்னமலையைச் சேர்ந்த நடத்துனர் சந்திரசேகர் தனஞ்சயன்(24வயது) ஆகியோரே காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த இருவர் கல்முனையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு இரவு (06) பாலமுனையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த தனியார் பஸ் காரைதீவு பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர்களது ஊரைச் சேர்ந்த (பாலமுனை) சக நண்பர்களுக்கு அறிவித்து நண்பர்களால் பஸ் மறிக்கப்பட்டு சேர்ந்து 20க்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பஸ் சாரதியையும், நடத்துனரையும் தாக்கியுள்ளர்.

தாக்குதலுக்குள்ளானவர்கள் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மற்றைய நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.