(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டனம் ஆரோக்­கி­ய­மா­னதும் வர­வேற்­கத்­தக்க ஒன்­றா­கவும் அமைந்­துள்­ளது. எனினும் மலை­யக மக்கள் குறித்தும் தோட்­டத் ­தொ­ழி­லாளர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்­தப்­பட வேண்டும் என மலை­யக தமிழ் பிர­தி­நி­திகள் சபையில் எடுத்­து­ரைத்­தனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கைப்பிர­கடன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே அவர்கள் இதனைக் கூறினர். 

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வி.இராதா­கி­ருஷ்ணன் உரை­யாற்­று­கையில், ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­ட­னத்தில்  பல நல்ல திட்­டங்கள் உள்­ளன. குறிப்­பாக அநா­வ­சிய செல­வு­களைக் குறைக்கும் திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தாக உள்­ளது.எனினும் இந்த திட்­டங்கள்  குறிப்­பிட்ட தேர்தல் காலத்­துக்கு மட்டும் அல்­லது பாரா­ளு­மன்­றத்தை அமைக்கும் வரையில் மாத்­திரம் இதனை செய்­து­விட்டு  மீண்டும் பழைய முறைக்கு செல்லக்கூடாது. தொடர்ச்­சி­யாக இதனை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும். இல்­லையேல் அது மக்­களை ஏமாற்­று­வ­தற்கு ஒப்­பாகும். 

அதேபோல்  தோட்டத் தொழில் குறித்து அவர் ஆரோக்­கி­ய­மான நல்ல விட­யங்­களை கூறி­யுள்ளார். அது மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. ஆனால் தோட்­டத் ­தொ­ழி­லாளர் குறித்து அவர் பேச­வில்லை. எமது மக்­களின் வாழ்க்கைப் பிரச்­சினை, சம்­பளப் பிரச்­சினை குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும்.  மலை­யகத்தில் அண்­மையில் ஏற்­பட்ட அனர்த்தம் கார­ண­மாக மக்கள் லயன்­களில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டனர். ஆனால் இன்­று­வரை அதை புனர்­நிர்­மாணம் செய்­ய­வில்லை. மக்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆகவே அவர்­களின் எதிர்­காலம் குறித்து சிந்­திக்க வேண்டும் 

  ஜனா­தி­ப­தியின் கல்வித் திட்டம் ஆரோக்­கி­ய­மா­னதும்  வர­வேற்­கத்­தக்க விட­ய­மு­மாகும். ஆயிரம் பாட­சா­லைகள் உரு­வாக்கும் 

திட்­டத்தில் மலை­யக பாட­சா­லைகள் உள்­வாங்­கப்­பட வேண்டும். அத்­துடன் மலை­ய­கத்தில் பல்­க­லைக்­கழகம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். நாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மலை­யக பகு­தியில் அவ­ரது சேவை விஸ்­த­ரிக்­கப்­பட வேண்டும். அவரை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்றார். 

இந்த விவா­தத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் தில­க­ராஜா உரை­யாற்­று­கையில்,  இந்த வரு­டத்தின் வரவு செலவு திட்டம் முன்­வைக்­க­ப்ப­ட்டுள்ள போதிலும் அதனை நிறை­வேற்றும் விதத்தில் ஜனா­தி­ப­தியின் உரையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் பிர­தான விட­யங்­களில் பொரு­ளா­தார நிலைப்பாட்டை உறு­திப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம், உள்ளூர் தொழி­லாளர் பாது­காப்பு என பல விட­யங்கள் உள்­ளது. பிர­தா­ன­மாக மலை­யக மக்­கள் அதிகம் கவ­னிக்­கப்­பட வேண்டும்.  நீண்­ட­கா­ல­மாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற மலை­யக மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1000 ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்­ப­தாக கூறி­ய­வர்கள் இன்று அமைச்சுப் பத­வியில் இருந்தும் பதில் எதுவும் இல்லை.

அர­சியலமைப்பை திருத்­து­வதன்  மூலமே சிறு­பான்மை மக்­க­ளுக்கு  தீர்வு கிடைக்கும். ஆனால் அர­சியல் அமைப்­பினை திருத்­து­வதன் மூல­மாக சிறு­பான்மை மக்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள்  என்றால் அதனை நாம் ஏற்­று­க்கொள்­ளவே மாட்டோம். சமூக ஊட­கங்­களில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  80 சதவீத வருகையை பெறாவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என கூறப்படுகின்றது. அது உண்மை என்றால் எங்களின்  மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரின் பதவியே முதலில் பறிக்கப்படும்  என்றார்.