சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய மோட்டார் சைக்கிள்கள் மூன்று, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக  நேற்று திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்தில் சதுஜனன் (28 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் காயமடைந்த மூவரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சுற்றுலா ஒன்றுக்காக மூன்று மோட்டார் சைக்கிள்களில்  6 பேர் சென்றிருந்த நிலையில் இவர்கள் விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.