திருகோணமலை கன்னியா வழக்கில்  இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரையின்  பௌத்த நிர்வாகப்பிரிவை இணைப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி  மேல்நீதிமன்றம் அறிவிக்கும் என திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அதற்கு முன்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி வழக்கில் சம்பந்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களம்,பிள்ளையார் ஆலய தர்மகரத்தா ,வில்கம்விகாரை நிரவாகம் உள்ளிட்ட  மூன்று பிரிவினரையும் எழுத்துமூலமான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளம்செழியன் இன்று உத்தரவிட்டார்

கன்னியாவில் பிள்ளையார் ஆலய நிருவாகம் சார்பில் தர்மகரத்தாவினால் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2019நவம்பர்  25ம் திகதி எடுத்துக்கொண்ட போது  தம்மையும்  இவ்வழக்கில் இணைத்துக்கொள்ளுமாறு வில்கம் விகாரையின் சார்பில் இடைப்புகுத்தல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

 கன்னியாவில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவின் காணி எடுத்தமை தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது. இது தொடர்பான வழக்கிலேயே வில்கம்விகாரையின் சார்பில் இடைப்புகுத்தல் மனு சமர்ப்பிக்கப்பட்டது.

இம்மனுவை எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான விடயம் இன்று நடைபெற்ற அமர்வில் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இழம்செழியன் முந்நிலையில் ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த இடைப்புகுத்தல் மனுவை  கன்னியா பிள்ளையார் ஆலய தர்மகரத்தா சார்பில் ஆஜாரன சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலமையிலான  குழுவினர் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டனர்.

 ஆயினும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான அதிகாரிகள் தாம் அதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி மூன்று பிரிவினரது நிலப்பாட்டின் எழுத்து மூலமான ஆவணத்தை எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி  மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பணித்த நீதிபதி குறித்த விடயம் தொடர்பான முடிவை நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி அறிவிக்கும் எனவும் அறிவித்தார்