(செ.தேன்மொழி)

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைதுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க அவர்களை கைது செய்வதால் அரசாங்கத்திற்கு எந்தவித இலாபமும் கிடைக்காது என்றும் தற்போது வெளியாகியுள்ள சர்சைக்குறிய குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மூன்றாம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவரது  கொள்கை பிரகடணத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பில் இடம்பெற்ற இரு நாள் விவாதத்தில் எதிர்தரப்பினர் யாருமே ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்திருக்கவில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமே ஒருசில கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தில் பல நன்மைபயக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் சிறந்த விவாதம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விவாதத்தின் போது அவரது உரையை ஆரம்பித்தவுடன் சிறுபிள்ளைத் தனமாகவே செயற்பட்டார்.

எம்.சி.சி ஒப்பந்தம் மற்றும் சிங்கப்பூர் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். இவ்வாறு செய்தால் 225 உறுப்பினர்களின் ஆதரவையும் வழங்குகின்றோம் என்று தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நீங்கள் எவ்வாறு எங்களது ஆதரவையும் வழங்கமுடியும் என்று கேள்வியெழுப்பினர். அதனால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது. ஏன் இவர் இவ்வாறு விளக்கமின்றி செயற்படுகின்றார் என்பது எமக்கு புரியவில்லை. 

சஜித் கூறுவதைப் போன்று வெளிநாட்டிலிருந்து முன்வைக்கப்படும் யோசனைகளை உடனே கிழித்தெறிய முடியாது. வெளிநாடுகளுடன் உறவைப் பேண வேண்டும் என்றால் அவர்களால் முன்வைக்கப்படும் யோசனைகள் தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

இதேவேளை இவற்றின் ஊடாக நாட்டுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்பட்டால் அவற்றை நிவர்த்திசெய்து கொள்வது எமது பொறுப்பாகும்.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கு இலங்கையை அமெரிக்காவின் காலனி நாடாக மாற்றுவதற்கான யோசனையும் இருந்தது. இதனால் பெருந்தொகையான நிதியை திரட்டிக் கொள்ள முடியும் என்பதே அவரின் எண்ணம்.

இராணுவத்தினர் , பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தொடர்பில் சஜித் மிக அக்கறையுடன் பேசிவருகின்றார். கடந்த அரசாங்கத்தில் இவர்கள் கைது செய்யப்படும் போது ஐ.தே.க.வின் பிரதி தலைவர் பதவியை வகித்த அவர் அமைதியையே காத்து வந்தார். இதேவேளை கடந்த அரசாங்கத்தில் தோட்டப்புறக் காணிகள் பல தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட்டன.

இதனால் தோட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இவற்றை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்ரில்லா ஹோட்டலுக்கு முன்னால் அமைந்துள்ள காணியை விற்றதாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலத்தால் ஹோட்டலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலின் காரணமாக இவர்கள் கடந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் தற்போதைய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் அவதானம்  செலுத்தி இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்வதால் அராங்கத்திற்கு எந்த வரப்பிரசாதமும் கிடைக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. எதிர்வரும் பொது தேர்தலின் போது 19 ஆவது திருத்தத்தை மாற்றி அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக முழு முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.