(நா.தனுஜா)

அரசாங்கம் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் புறக்கணித்து, அதற்கு எதிர்மாறாகவே அரசாங்கம் இப்போது செயற்பட்டு வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை(08.01.2020) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கம் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் புறக்கணித்து, அதற்கு எதிர்மாறாகவே அரசாங்கம் இப்போது செயற்பட்டு வருகின்றது. ஆளுந்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த போதும், அண்மையில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு எத்தகையது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

அதேபோன்று தாம் ஆட்சிக்கு வந்தால் நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் தற்போது சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் மூலம் ஷங்ரிலா ஹோட்டலுக்கு அண்மையிலுள்ள காணியை வழங்குவதற்கான அனைத்துத் தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. சிறந்த மற்றும் அறிவுபூர்வமான மனிதவளத்தைக் கட்டியெழுப்புவோம் என்று கூறியவர்கள், எமது அரசாங்கத்தினால் கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்பட்டு வந்த போசணை நிவாரண உதவியை இடைநிறுத்தியிருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமுதாயம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் தற்போதைய அரசாங்கம் கூறியது. ஆனால் எமது அரசின் கல்வியமைச்சு பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை வழங்குவதற்கு முன்னெடுத்த செயற்திட்டத்தை இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது. அவ்வாறெனின் இவர்கள் எந்த அடிப்படையில் தொழில்நுட்பத்தை மையப்படுத்திய சமுதாயத்தை உருவாக்கப் போகிறார்கள் என்று எமக்குப் புரியவில்லை.

மேலும், நீதியானதும் நேர்மையானதுமான சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிவிட்டு, ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நாம் வழங்கிவந்த நிவாரணக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்தல் மற்றும் சமுர்த்தி ஊழியர் நியமனத்தை இடைநிறுத்துதல் போன்றவற்றையே அரசாங்கம் செய்துவருகிறது. இது தமக்கு மிகுந்த வேதனையை தருவதாகவும் அவர் மேலும். தெரிவித்தார்.