சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகன் கொலை வழக்கில் அவரது மனைவியே ஆட்களை வைத்து கொலை செய்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து முருகனின் மனைவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்லூரி  நண்பனுடன் தான் வைத்திருந்த கள்ளக் காதலை கணவர் கண்டுபிடித்துத் தட்டிக் கேட்டதால் ஆட்களை வைத்து தனது கணவனை கொலை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த முருகன் (வயது 44)  கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது குறுக்குத் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாடகை வீடு ஒன்றைப் பார்ப்பதற்காக காரில் சென்றவேளை,அப்போது அவரைப் பின் தொடர்ந்து முச்சக்கரவண்டியில் வந்த 4 பேர் வீட்டு வளாகத்திற்குள் முருகன் நுழைந்தபோது, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கோடம்பாக்கம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து  2 தனிப்படைகள் அமைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. 

முருகனுக்கு திரையுலகத் தொடர்புகளும் நிறைய இருந்துள்ளமையால், திரைத்துறையில் யாருடனாவது பிரச்சினையா என்ற ரீதியில் பொலிஸார் விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில் முருகனின் கையடக்க தொலைபேசியில் கடைசியாக வந்த அழைப்பை வைத்து கொலையாளிகளை எளிதாக வளைத்துப் பிடித்தனர் . 

முருகன் கொலை செய்யப்பட்ட சற்று நேரத்தில், அவரது கையடக்க தொலைபேசிக்கு வந்திருந்த அழைப்பு யாருடையது என்று விசாரித்தபோது அது முருகனின் மனைவி லோகேஸ்வரியின் எனத் தெரிய வந்தது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் லோகேஸ்வரி தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பொலிஸாரிடம் வாக்குமூலமளித்த லோகேஸ்வரி,

நானும், முருகனும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டோம். ஆரம்பத்தில் எங்கள் இல்லற வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர்.

நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்தது. இந்த நிலையில் கல்லூரியில் என்னுடன் சேர்ந்து படித்த சண்முகநாதன் என்பவருடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் மெதுவாக கள்ளக்காதலாக மாறியது.

எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் முருகனுக்கு தெரிந்துவிட்டது. சண்முகநாதனுடனான பழக்கத்தை கைவிட வேண்டும் என்று என்னை கண்டித்தார். எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். இதனால் முருகனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுபற்றி சண்முகநாதனிடம் தெரிவிக்க அவரும் எனது முடிவுக்கு உடன்பட்டார்.

முருகனை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்திருந்தோம். இந்தநிலையில் கோடம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு பார்ப்பதற்காக முருகன் சென்றவேளை ஆட்களை வைத்து முருகனை கொலை செய்தோம்.

சண்முகநாதன் மறைந்து இருந்து பார்த்து முருகன் இறந்த தகவலை எனக்கு அவர் தெரிவித்தார். நானும் இது உண்மையாக இருக்குமா?, பொய்யாக இருக்குமா? என்பதை தெரிந்துகொள்ள முருகன் கையடக்க தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன்.

கையடக்க தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்கவில்லை. அதனால், முருகன் இறந்தது உண்மையாக இருக்கும் என்று நம்பிக்கொண்டேன். ஆனால், அவரது கையடக்க தொலைபேசியில் இருந்த மிஸ்ட் கோலை வைத்து பொலிஸார் என்னை கண்டுபிடித்துவிட்டனர் என்றார்.

இந்நிலையில்,தலைமறைவாகியுள்ள  கள்ளக்காதலனான சண்முகநாதனை பொலிஸார்  வலை வீசி தேடி வருகின்றனர்.