பெரு நாட்டில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் ஒன்று  விபத்துக்குள்ளானதில் ஜெர்மனியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரு நாட்டில் பஸ் விபத்தில் 16 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகர் லிமாவிலிருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவுக்கு அடுக்குமாடி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 60 பேர் பயணம் செய்தனர்.

அரேகிப்பா நகரில் உள்ள ஒரு சாலையில் பஸ் 100 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் திரும்பியபோது, ஓட்டுனரி்ன் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் நிலைதடுமாறிய பஸ் சாலையில் கவிழ்ந்து, உருண்டது. இந்த கோர விபத்தில் ஜெர்மனியை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

மேலும் பிரேசிலை சேர்ந்த 2 பேர், அமெரிக்காவை சேர்ந்த 2 பேர் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.