இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு :20 போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களை குவித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு :20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு இந்தூரில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை குவித்தது. 

தனுஷ்க குணதிலக்க 20 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 22 ஓட்டங்களையும், குசல் பெரேரா 34 ஓட்டங்களையும், ஓசத பெர்னாண்டோ 10 ஓட்டங்களையும், பானுக்க ராஜபக்ஷ 9 ஓட்டங்களையும், தசூன் சானக்க 7 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 17 ஓட்டங்களையும், இசுறு உதான ஒரு ஓட்டத்தையும், மலிங்க டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க வனிந்து ஹசரங்க 16 ஓட்டங்களுடனும், லஹிரு குமார எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தார்.  

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சார்துல் தாகூர் 3 விக்கெட்டுக்களையும், நம்டீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களையும், வோசிங்டன் சுந்தர் மற்றும் பும்ரா தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.