பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், தனது 53 ஆவது பிறந்த தினத்தன்று ‘த பியூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ,இசை அமைப்பை தொடங்கியுள்ளார்.

இவர்  தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் (06-01-2020)  கொண்டாடினார்.

இதுதொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“தமிழகத்தின் கலாச்சார வி‌ஷயங்களை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக ‘த பியூச்சர்ஸ்’ கலை அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்த கால குழந்தைகள் யூடியூப் வழியே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிவோடு நம் கலாச்சாரம், நற்பண்புகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அதை முன்னெடுக்கும் முயற்சியாக எம்.ஐ.டி கல்லூரி இயக்குநர் பரத்பாலாவுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளோம். சமூக வலைதளம் வழியாக மேலும் பலரும் இதில் ஒன்றிணையலாம்.

இன்றைக்கு உலகளவில் ஒரு போர்க்கால சூழல் போல, எதிர்மறையான எண்ணங்கள் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன.

அதை இளம் தலைமுறையினரிடம் சேர விடாமல் தடுக்கும் ஒருவிதையாக இந்த அமைப்பை நினைக்கிறோம். இசை உள்ளிட்ட கலை வடிவங்கள் வழியாக இதை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்.

‘தா’ என்பது தாய், தமிழ், தந்தை, தர்மம் எனப் பல விஷயங்களுக்கு ஓர் அடையாளச் சின்னமாகத் திகழ்வதுபோல, இந்தப் பெரிய முயற்சிக்கு ஒரு சிறிய விதையாக அது அமையும்” என தெரிவித்துள்ளார்.