(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பாராளுமன்றத்திலும் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க, காலி பிரதி பொலிஸ்மாதிபரின் தனிப்பட்டசெயலாளராக கடமையாற்றும் ஷானி அபேசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டு சுயாதீன  விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் அரசியல்  பழிவாங்கலுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பத பலரது கருத்துக்களின் ஊடாக  வெளிப்பட்டுள்ளன.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின்  விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. இவர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் ரஞ்சன் ராமநாயக்க  மற்றும்  குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகிய இருவரும் உரையாடிய குரல் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள் மிக  பாரதூரமானது.

அதிகாரத்தை  வைத்துக் கொண்டு தமக்கு எதிர்தரப்பினரை கைது செய்யுமாறு குறிப்பிட்ப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தற்போது அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முத்துறைகளையும் அவமதிக்கும் விதத்திலே  செயற்பட்டுள்ளார் என்பது பல விடயங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்  ராமநாயக்க தொடர்பில் பாராளுமன்றத்திலும் உரிய  நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும். சர்ச்சைக்குரிய  விடயம் தொடர்பில்    பாராளுமன்றத்தில்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பதுஅரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.  சபாநாயகர் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு  பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர  இன்றும் சேவையில் உள்ளார். அவர்   பதவி நீக்கப்பட்டு  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே உண்மை தன்மை வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.