இந்தியா கொச்சியில், மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார். அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவரே விவேக் ஆர்யன்.

இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடதக்கது. 

 மேலும், மனைவியுடன் தமிழில் சில குறும்படங்களை இயக்கியுள்ள விவேக் ஆரியன், அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி, தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் அருகிலுள்ள கொடுங்கல்லூரில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதற்காக வண்டியை திருப்பினார். அப்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையிலும் அம்ருதாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால், தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார் விவேக். இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். மரணிக்கையில் அவருக்கு வயது 30. மறைந்த அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.