பாராளுமன்றத் தேர்தல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெறுவதை விட மலையக மக்கள் முன்னணியின் அடையாளத்தையும் அமரர் சந்திரசேகரனின் சேவைகளை நிலை நிறுத்துவதுடன் அதனை தொடர்வதற்காகவுமே களமிறங்கப் போவதாக சட்டத்தரணியும், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவருமான அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும் கட்சியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் ஊடக செய்திக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணனின் கருத்து எனக்கு எவ்வித ஆச்சரியத்தையோ வருத்தத்தையோ தரவில்லை, ஏனெனில் கடந்த காலங்களாகவே கட்சியில் விரும்பினால் இருக்கலாம் இல்லாவிட்டால் போகலாம் என்ற நிலைமையே நீடித்து வருகின்றது. எனது ஆரம்ப கால அரசியல் தொடக்கம் கட்சியை பொறுத்தவரை எனக்கும் இந்நிலைமையே நீடித்து வருகின்றது. எனினும் இது தொடர்பில் வெளிப்படையாகப் பேசினால் ஆதரவாளர்கள் அச்சமும் வருத்தமும் அடைவதுடன் மட்டுமல்லாது குழப்பங்களையும் போராட்டங்களையும் விளைவிக்க தூண்டும் என்பதாலேயே நான் இவ்வளவு காலமும் அமைதி காத்தேன்.
எனது தீர்மானம் தனி நபர் ஒருவரின் தீர்மானம் என்பது தவறான கருத்தாகும். மலையக மக்கள் முன்னணியின் பெரும்பாலான ஆதரவாளர்களினதும், இளைஞர்களினதும், பெண்களினதும், ஆரம்ப கால உறுப்பினர்களினதும், மலையக புத்திஜீவிகளினதும் வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ள நான் உந்தப்பட்டேன். எமது மக்கள் என்னுடன் இருக்கும் வரை நான் தனி நபர் இல்லை என்பதையும் அவர்களின் குரலாய் என் குரல் ஒலிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மலையக மக்கள் முன்னணியின் இன்றைய நிலை ஏகாதிபத்தியத்தின் பாதையில் தடம்புரள்கிறது. இந்நிலைமை தொடர்ந்தால் இக்கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த இலக்கு தவறிவிடும் என்பதே நிதர்சனமாகும். மேலும் இக்கட்சியை நம்பியிருக்கும் மலையக மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இது மக்களாலும், எனது தந்தை சந்திரசேகரனின் கூட்டுமுயற்சியாலும் உருவாக்கப்பட்ட மக்களின் கட்சியாகும். இந்தக் கட்சியில் இருந்து மலையக மக்களுக்காக குரல் ஒலிக்க வேண்டுமே தவிர ஒரு சில நபர்களின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்காக ஒலிக்கும் குரலாக மாறிவிடக் கூடாது.
சமூக அநீதிக்கு எதிராக இரத்தம் சிந்திப் போராடிய ஒரு வீரனின் மகளாக பிறந்த நான் ஒருபோதும் கோழைத்தனமான அரசியலை முன்னெடுக்க மாட்டேன். அவ்வாறானவர்களுக்கு துணை போகவும் மாட்டேன். எனது தந்தை ஒருபோதும் சந்தர்ப்பவாத அரசியலோ அல்லது வயிற்றுப்பிழைப்புவாத அரசியலோ செய்ததில்லை. நான் ஒவ்வொரு தோட்டத்துக்கும் சென்று எமது மக்களைச் சந்திக்கும் போது எனது தந்தை அவர்களது மனங்களில் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இதன்மூலமே எம் மக்களுக்கான எனது கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்கின்றேன்.
இக்கட்சியை சரியான பாதையில் வழிநடத்தவும் தலைவர் சந்திரசேகரனின் மலையக மக்களினதும் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் எனக்கு உண்டு. ஆகவே இந்தப் போராட்டத்தை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.
எதிர்காலத்தில் மலையக மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்சியை சரியான பாதையில் எடுத்துச்செல்ல தேவையான நடவடிக்கைகளை மக்களின் ஆதரவுடன் மேற்கொள்வேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM