வவுனியா நகரசபையினால் சீரான முறையில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை என தெரிவித்துள்ள வரியிறுப்பாளர்கள் தனியாருக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வரியிறுப்பாளர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வாராந்தம் ஒவ்வொரு கிராமமாகக் குப்பை அள்ளும் செயற்பாட்டைப் பட்டியலிட்டு நகரசபைக் குப்பைகளை அகற்றி வருகின்றது. எனினும் அவ்வாறு குப்பைகளை அகற்றும்போது குறித்த கிராமங்களில் சில பகுதிகளில் குப்பைகளை அகற்றாமல் செல்கின்றனர். அவ்வாறு அவர்களால் குப்பை அகற்றப்படாத போது அடுத்த வாரம் வரை வீட்டு உரிமையாளர்கள் குப்பைகளை அவர்களின் வீட்டிலேயே தேக்கி வைத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது.

குரங்குகளின் தொல்லைகளால் குறித்த குப்பைகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் வீட்டு உரிமையாளர்களும் காணப்படுகின்றனர்.

எனவே இது தொடர்பில் நகரசபைக்கு அறிவித்தபோதிலும் நகரசபையினரும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி வருகின்றனர். அத்துடன் வட்டார உறுப்பினர்களாக நகரசபையில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அசண்டையாகவே உள்ளனர்.

எனவே  நகரசபைக் குப்பைகளை அகற்றும் செயற்பாட்டைத் தனியாருக்கு வழங்குவதனூடாக நகர்ப்பகுதியில் சிறந்த முறையில் குப்பை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க வழிவகை செய்ய முடியும். இதனையே வரியிறுப்பாளர்களாகிய நாமும் விரும்புகின்றோம்.

வருடாந்தம் வரி செலுத்துகின்ற போதிலும் நகரசபையால் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வேலைத்திட்டமான குப்பை அகற்றுவதைக் கூட சீராகச் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றமை கவலைக்குரியது என வரியிறுப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.