பாராளுமன்றம் இன்று கூடுகின்ற நிலையில்  ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான இரு நாட்கள் பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. 

எனினும் விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பை  கேட்பதில்லை என கட்சிகள் இடையில் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. 

எட்டாவது பாராளுமன்றதின் நான்காம் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய வேளையில் அன்றைய தினம் ஜனாதிபதியின் அக்கிராசன உரை இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து கூடிய விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன் உரை மீதான விவாதம் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டதற்கு அமைய கட்சி தலைவர் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. 

அதற்கமைய இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது.  இன்றும் நாளையும் கூடும் பாராளுமன்ற அமர்வுகளின் போது இரு நாட்கள் விவாதமாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. 

எனினும் ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு கேட்பதில்லை என கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணி விவாதத்தை கேட்டாலும் வாக்கெடுப்பு கேட்கப்போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக அறிவித்துள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சிக்கு முதலில் வாக்கெடுப்பு கேட்போம் என்ற எண்ணப்பாடு இருந்த போதிலும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதனை மறுத்ததன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கெடுப்பை கேட்காது என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாக்கெடுப்பை கேட்க தயாராக இல்லை என்றே அறிவித்துள்ளனர். 

எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் பல நல்ல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் சிறுபான்மை மக்கள் சார் எந்தவித கருத்துக்களையும் ஜனாதிபதி முன்வைக்காதமை  தமிழ் முஸ்லிம் கட்சிகள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த உரையினை கடுமையாக விமர்சித்தும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.