ரூபா 5.8 கோடி (ரூபா. 58 மில்லியன்) பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் சுமை தூக்குபவர் (Porter) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான குறித்த சந்தேக நபர் தனது உடலில் மறைத்து வைத்த நிலையில், 100 கிராம் நிறை கொண்ட 65 தங்க பிஸ்கட்டுக்களையும் விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமாகக் கடத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தின் போதைத்தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லால் வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்டுக்களின் மொத்த நிறை 6.5 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிளால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே, குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.