தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களை தலைமை தாங்கப்போவது சுமந்திரனா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கவேண்டும். முன்னாள் முல்வர் விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பலர் இணைந்து "தமிழர் ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த மாற்று அணியுடன் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேணடுமென ஈ.பி.ஆர்.எல் எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதியில் நேற்றைய தினம் கட்சியினுடைய அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் புதிய ஜனாதிபதி தான் சிங்கள மக்களால் தெரிவுசெய்யப்பட்டேன் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் பெரும்பாண்மை இனத்தவர்கள் அவருக்கொரு ஆணையை வழங்கியிருக்கலாம். ஆனால் அதே சமயம் வடகிழக்கிலுள்ள மற்றொரு தேசிய இனமான, தமிழ்த் தேசிய இனம் என்பது இன்னுமொரு ஆணையைக் கொடுத்திருக்கின்றது.
எமது இனம், மொழி, நிலம் என்பன காப்பாற்றப்படவேண்டும், எமக்கான உரிமைகள் கிடைக்கப் பெறவேண்டும், அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஆகவே ஒட்டுமொத்தமான நட்டினுடைய அரச தலைவர் எனச் சொல்லக்கூடிய ஒருவர், வெறுமனே சிங்கள மக்கள் கொடுத்த ஆணையினை மாத்திரமல்ல, அவருக்கு எதிராக இருந்தாலும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும் அவர் பரிசீலிக்கவேண்டும்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த மக்களுக்குமான அரச தலைவராக அவர் இருந்தால் இந்த விடயங்களை நிராகரிக்க முடியாது.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக குழுக்களையும் உருவாக்கியுள்ளன.
அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுக்களால் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டாலும், எந்த சிங்களத் தலைமைக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திராணியோ, பக்குவமோ கிடையாது. அதனைப் போட்டு மிதித்து இல்லாமல் செய்கின்ற போக்கைத்தான் நாம் தொடரச்சியாக பார்க்கக் கூடியதாகவுள்ளது.
தற்போது வந்திருக்கக்கூடிய கோத்தபாயவின் தலைமை என்பது எல்லாவற்றினையும் நிராகரித்ததுடன், தற்போது பிரச்சினை என்று எதுவும் கிடையாது. அபிவிருத்தி செய்தால் போதுமானது. அந்த அபிவிருத்தியை நாம் செய்வோமென்று கூறுகின்றனர்.
வட, கிழக்கு போரில் பாதிக்கப்பட்ட மாகாணங்கள், இங்கு பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இங்குள்ள மக்கள் பெருமளவானோர் வாழ்வாதார தேவையுடைவர்களாகவும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களாகவும் காணப்படுகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கேட்டால் காணாமல் போனோர், காணாமல் போனோர்தான். ஆகவே அவர்கள் காணாமல் போனோர் தொடர்பில் அக்கறை எடுப்பதற்குத் தயாராக இல்லை.
யுத்தத்தில் இரு தரப்பினருக்கிடையில் யுத்தம் இடம்பெறும்போது, அதில் இறந்தவர்கள் காணாமல்போயிருக்கலாம். இது தற்போதைய அரச தலைவரினுடைய கருத்தாக இருக்கின்றது.
ஆனால் நாங்கள் யாரும் அதைப்பற்றிப் பேசவில்லை. நாங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், பொதுமக்களுக்கு முன்பாக கடத்தப்பட்டிருக்கக்கூடிய இருபதினாயிரம் பேருக்கும் மேற்பட்டோரைப் பற்றிப் பேசுகின்றோம். உண்மையான, நேர்மையான அரசாங்கம் என்றால் அவர்கள் இதற்கு பதில்சொல்லியாக வேண்டும்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக 16பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினாலும், சிவசக்தி ஆனந்தனைத் தவிர ஏனைய 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதைச் செய்தார்கள். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் ஆளும் கட்சிக்கு துணையாக அவர்கள் செயற்பட்டனர்.
கடந்த ஆட்சியில் ரணில் ஒரு புறமும் மறுபுறம், மைத்திரி மைத்திரியுமாக ஓர்கயிறிளுவைப் போட்டிக்குப்போய் தங்களுடைய பிரச்சினைகளைப் பார்த்தார்களே தவிர, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆனாலும் மைத்திரி மற்றும் ரணில் ஆகிய இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமர்த்தி இந்த அரசியல் சாசனத்தினை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
ரணில் அரசாங்கம் கவிழ்ந்தபோது நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தவர் சுமந்திரன். ஆனால் வழக்கு தொடரவேண்டியவர்கள் ஐக்கியதேசியக் கட்சியினரே. எனினும் ஜனநாயகத்திற்கு பாதிப்பு எனவேதான வழக்குத் தொடரப்பட்டதாக சம்பந்தன் சொன்னார். இவ்வாறு ஜனாநாயகத்தினை காப்பாற்றுகின்றோம் என்று சொல்கின்றவர்கள், மாறாக தமிழ் மக்களுக்கு எதைச் செய்தார்கள்.
அரசியல் சாசனத்தினை ஒருபுறம் வைத்தாலும்கூட, தற்போது தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற, அரசியல்கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்புகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த பிரச்சினைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம்.
ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியைச்சர்ந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூறினாராம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல கோரிக்கையை எம்மிடம் முன்வைக்கும் என்று பயந்தேன். ஆனால் அவர்கள் எதனையும் முன்வைக்கவில்லை என்று கூறியதாக அறிந்தேன். எனவே இவ்வாறனதொரு தலைமையினைத்தான் நாம் கொண்டிருக்கின்றோம். இவ்வாறானதொரு தலைமையினைத்தான் இதுவரையில் நாம் வைத்திருக்கின்றோம்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் அரசாங்கத்தினைக் காப்பாற்றினார்கள். எமக்கு விரோதமான வரவு செலவுத் திட்டங்களை சம்பந்தன் ஆதரித்தார். வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிக்காதுவிட்டால்அரசு கவிழும் நிலை இருந்தது. எனவே அரசை பாதுகாப்பதில்அவர் தெளிவாக இருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு தேர்தல் வரப்போகின்றது. அதற்கான ஆசனப் பங்கீடுகளைச் செய்து முடித்திருக்கின்றனர். மீண்டும் எமது பலத்தினை எமது மக்களுக்கு நிரூபிப்போம் என்று கூறப்போகின்றனர். பலத்தை நிரூபித்து இதுவரையில் எதைச் செய்தார்கள். எதுவும் செய்யவில்லை.
இதுவரைகாலமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்தவற்றை ஒரு பட்டியலிட்டு காட்டட்டும். ஆனால் அவர்களால் அவ்வாறு பட்டியலிடமுடியாது.
முன்பு சுமந்திரன் யாழில் இடம்பெற்ற ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் ஒருவிடயத்தினைச் சொன்னார். இந்த அரசியல் சாசனம் வராவிட்டால் தன்னுடைய பதவினைத் துறப்பதாக கூறினார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
தற்போது இந்த அரசுடனும் அரசியல் சாசனம் தொடர்பில் பேசவேண்டி ஏற்படும் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் தனது சட்டத் திறமைகளை தமிழ் மக்களுக்கு காட்ட முயல்கின்றார். அவர் ஒரு பிரபல சட்டத்தரணி. ஆனால் அவர் சிறந்த தலைவர் இல்லை.
தற்போது சம்பந்தன் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனாதிராசா கையறு நிலையில் உள்ளபோது, தமிழ் மக்களை தலைமை தாங்கப்போவது சுமந்திரனாஎன்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்கவேணடும்.
அவ்வாறான மோசமான நிலை தோன்றுமானால் தமிழ் மக்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுவர். ஐக்கிய தேசியக்கடசினுடைய முகவராகச் செயற்படக்கூடிய சுமந்திரன், தமிழ் மக்களுக்குத் தலைமைத் தாங்குவதாக இருந்தால் அவர்களுடைய பிரச்சினை எங்கேபோய் முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேணடும்.
ஆகவே மாற்றம் ஒன்று அவசியம், இதே நிலையில் நாம் தொடர்ந்தும் பயணப்பட முடியாது. அந்த மாற்றம் உருவாக்கப்படவேண்டும். அந்த மாற்றத்தினூடாக சரியான தலைமைகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அந்தத் தலைமைகள் போராட்டத்தின் வலியை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.
தொடர்ந்தும் நாம் பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தால் தமிழ் மக்கள் பாரிய பின்னடைவிற்குள் சென்றுவிடுவார்கள்.
இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள விடயம், தமிழ் தேசியமாகும்.அந்த தேசியம் என்ற விடயத்தினையும் தமிழ் மக்களிடமிருந்து அகற்றிவிடவேண்டும் என்பதில்சுமந்திரன் உறுதியாக இருக்கன்றார்.
எனவே கட்டாயமாக ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்திற்காக, கடந்த இருவருடங்களாக நாங்கள் முயற்சித்துவருகின்றோம். அந்த அடிப்படையில்தன் முன்னாள் முதல் வர் விக்கினேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். தமிழ் மக்கள் கூட்டணி, எங்களது கட்சி, இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பலர் இணைந்து ஒரு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கியிருக்கின்றோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM