(செ.தேன்மொழி)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை போன்ற மக்கள் மனம்வென்ற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை அரசாங்கத்திற்கே பாதகமாக அமையும் என்று தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இவ்வாறான செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளது.

அனுமதமதிப் பத்திரம் காலாவதியான நிலையில் துப்பாக்கியொன்றை வைத்திருந்தமையின் பேரில் நேற்று ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இவ்வாறான ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இவ் இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

பாரியளவிலான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அரசியல் பழிவாங்கல் நோக்கம் காரணமாக அரசியல் வாதிகள் கைது செய்யப்பட்டு வருவதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.

ரஞ்சன் ராமநாகக்கவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எம்மிடம் இருந்தாலும் அவர் நாட்டு மக்களுக்காக எப்போதுமே முன்னின்று செயற்படுபவர். மக்கள் மனம்வென்ற அரசியல் வாதிகள் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மத்தியில் கைது செய்யப்பட்டுவருவது அரசாங்கத்தின் தற்போதைய நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் இயங்கிவரும் சூதாட்ட நிலையமொன்று தொடர்பான தகவல்களை நாங்கள் வழங்குகின்றோம். இந்த இடத்தை சோதனைக்குட்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுகின்றார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.