இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் 5 மில்லியன் டொலர் நஷ்டயீடு கோரி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தன்னுடன் ஒப்பந்த காலம் முடியும் முன்பே தன்னை தலைமைப் பயிற்சியாளர் பதவியலிருந்து நீக்கியமையினால் தன்னுடைய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியே அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மொகான் டிசில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹத்துருசிங்க மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.

எனினும் அவரது பயிற்சியின் கீழும் இலங்கை அணி மோசமாக பெறுபேறுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹத்துருசிங்க ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.