குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய விவகாரம் ஒன்று அமெரிக்காவில் ஒரு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அவர்களும், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும் களமிறங்க உள்ளனர்.

இந்நிலையில், முகமது அலி மரணம் குறித்து டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள தனது அஞ்சலி குறிப்பில், ”ஒரு உண்மையான மற்றும் மகத்தான சாம்பியனான முகமது அலியின் இழப்பை அனைவரும் உணர்வர்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ், ”டொனால்ட் டிரம்ப் போலி தனத்தை கடைப்பிடிக்கிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன், ’டிரம்பை அவரது வார்த்தைகளையும், செயல்களையும் கொண்டே எடை போட வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் வருகை புரிவதை தடை செய்ய வேண்டுமென்றும், அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிப்பதுடன் அவர்களின் முகவரிகள், பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் கணக்கெடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

மேலும், ’தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இதனை கட்டாயமாக செயல்படுத்துவேன்’ என்றும் கூறியிருந்தார். டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து அப்போதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இஸ்லாமியரான முஹமது அலியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருப்பது சம்பிரதாயத்திற்கே என்றும் அலியின் மரணத்தை வைத்து டிரம்ப் அரசியல் செய்வதாக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.