கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே சுவாச பிரச்சினைகள் தோன்றுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபததினால் அப்பிரதேச மக்கள் மத்தியில் மிகவும் அச்சமான சூழ்நிலை காணப்படுகின்றது. மக்கள் தங்களது சுகாதார நலன் தொடர்பில் அதிகளவு  கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனவே குறித்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியேறிவரும் நச்சு கலந்த புகை சுவாச பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஏனவே மக்கள் சுவாச கோளாறுகள் மற்றும் திடீர் சுகவீனம் போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.