(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐந்து வருட காலத்துக்குள் இந்த நாட்டின் வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். சகலருக்கும் குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யலாம். அத்துடன் குடி நீர் ஒரு விற்பனைப் பொருளல்ல. ஆனால் அதற்காக செலவிடப்படும் தொகை ஈடு செய்யப்பட வேண்டுயுள்ளது என நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் தொம்பகம்மன மீள் குடியேற்றக் கிராமத்துக்கான சமூக நீர்வழங்கல் திட்டத்தை ஆரப்பித்து வைத்து உரை நிகழ்த்துகையில் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும் பாரிய முதலீடுகளை மேற்கொண்டே மக்களுக்கு குழாய் மூலம் தூய குடிநீரைப்பெற்றுக் கொடுக்கின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் கடன் உதவிகளைப் பெற்றே முதலீடுகளை செய்கின்றன.

இந்த மாவட்டத்தில் 17 முக்கிய நீர் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுவரும் அதேவேளை, சில நீர் திட்டங்கள் செயலிழந்துள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப நான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

சம்பளத்தை மட்டும் குறிக்கோளாக் கொண்டு எமது அதிகாரிகள் பணியாற்றவில்லை. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலமே மக்கள் நீர் வழங்கல் சேவையை அனுபவிக்கின்றனர்.

மேலும்  எமது அரசாங்கத்தின் ஐந்து வருட காலத்துக்குள்  நாட்டின் வறுமையை ஒழிப்பதே நோக்கமாகும்.  சகலருக்கும் குடி நீரைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு பாரிய பங்களிப்பு செய்யலாம் என்று நினைக்கின்றேன். குடி நீர் ஒரு விற்பனைப் பொருளல்ல.

என்றாலும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு பாரியதொரு தொகையை அரசாங்கம் செலவிட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யப்பட வேண்டுயுள்ளது. அதற்காகவே குறிப்பிட்டதொரு தொகை நீர் கட்டணமாக அறவிடப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.