பிரி­விடல் வழக்கை தாக்கல் செய்­ய­வேண்டும் என விரும்பும் ஒருவர் அல்­லது பலர் அவ்­வ­ழக்கை தாக்கல் செய்­வ­தற்குத் தேவை­யான சரி­யான தக­வல்­களை சட்­டத்­த­ர­ணிக்கு வழங்­கு­வா­ராயின் ஏனைய காணி வழக்­கு­களைப் போல் பிரி­விடல் வழக்­கையும் தாக்கல் செய்து தீர்ப்பைப் பெற்­றுக்­கொள்­வதில் சங்­க­ட­மில்லை. ஆனால் வழங்­கப்­படும் தக­வல்கள் சரி­யா­ன­வை­யாக இருக்­க­வேண்டும். பிழை­யாக இருப்பின் வழக்கை தாக்கல் செய்ய தாமதம் ஏற்­ப­டு­வது உண்­மையே. ஆகவே பிரி­விடல் வழக்கை தாக்­கல்­செய்ய வேண்டும் என்று விரும்­பு­ப­வர்கள் கையி­லேயே வழக்கின் தாமதமும் விளைவும்  தங்­கி­யுள்­ளது என்று கூறலாம். இங்கு கூறப்­ப­டு­கின்­ற­வற்றை மனதில் எடுத்து அதன்­படி உங்­க­ளது சட்­டத்­த­ர­ணி­யுடன் ஒத்­து­ழைத்தால் பிரி­விடல் வழக்கில் தாமதமி­ருக்­காது.

வழக்கின் விளக்கம் ஏன் தாமதமாகி­றது?

பிரி­விடல் வழக்கை பல்­வேறு தவ­ணை­களில் நீதி­மன்­றத்தில் அழைப்­பதால் வழக்கு விரை­வாக முடிந்து விடும் என எண்­ணக்­கூ­டாது. விசா­ரணை சுணங்­கு­வ­தற்கு கார­ணங்­க­ளாக அமை­வது அக்­கா­ணியின்  ஆரம்­ப­கால உரித்­தா­ளர்­களின் விபரம் கிடைக்­காமல் வழக்கை தாக்கல் செய்­வதும் மேலும் வழக்கு  நடை­பெற்­றுக்­கொண்டிருக்­கும்­போது காணியின் பங்­கு­தாரர் இறப்­பதால் அவர்­க­ளுக்கு பதி­லாக பதி­லீட்­டா­ளரை சரி­யாக அடை­யாளம் கண்டு அவர்­களை நீதி­மன்­றத்­துக்கு அழைக்­காமல் வேறு சிலரின் பெயரைக் கூறு­வ­தாலும் பல பிரி­விடல் வழக்­குகள் தாம­த­ம­டை­வ­தாகக் கூறலாம். பிரி­விடல் வழக்கின் 23ஆம் பிரிவு பிரி­விடல் வழக்­குக்குத் தேவை­யான தகவல் எதையும் பெற­மு­டி­யா­த­வாறு அமை­ய­வில்லை. அப்­பி­ரிவு கூறு­வது என்­ன­வெனில் வழக்கை நடத்­து­வ­தற்கு தேவை­யான ஆவ­ணங்­களின் பட்­டி­ய­லையும் அவ் ஆவ­ணங்­களில்  கூறப்­பட்­டுள்­ள­வற்றின் சுருக்­கத்­தையும் வழக்கு விளக்­கத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வுள்ள திக­திக்கு 30 நாட்­க­ளுக்கு முன்னர் வழக்கை தாக்கல் செய்த சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்­துக்கு ஆவ­ணப்­ப­டுத்தி  சமர்ப்­பிக்க வேண்டும். நான் அறிந்த வகையில் இப்­பட்­டியல் அவ்­வாறு நீதி­மன்­றத்துக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. சமர்ப்­பிப்­ப­தற்­கு­ரிய திக­தியை மாற்றித்  தரு­மாறும் பல தடவை இக் கோரிக்­கையை சட்­டத்­த­ர­ணிகள் முன்­வைப்­ப­தையும் நான் கண்­டுள்ளேன். மேற்­படி அட்­ட­வ­ணையில் உள்ள ஆவ­ணங்­க­ளையே விளக்­கத்தின் போது சட்­டத்­த­ரணி அடை­யா­ள­மிட நீதி­மன்றம் அனு­ம­திக்கும். ஆகவே அதில் கவ­ன­மாக இருக்­க­வேண்டும்.

24 ஆம் பிரிவின் கீழ் செய்ய வேண்­டி­யது என்ன?

பிரி­விடல் வழக்கின் 24ஆம் பிரிவு வழக்­குக்கு தேவை­யென கூறு­கின்ற பின்­வரும் ஆவ­ணங்­களை விளக்­கத்­துக்கு முன்னர் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றத்தில் இணைத்­தி­ருக்க வேண்டும் என கூறு­கி­றது.

1) உரித்துப் பட்­டியல்

2) நில­அ­ள­வை­யாளர் மூலம் பிரி­விடல் செய்­யப்­ப­ட­வுள்ள காணியை அளந்து அது சம்­பந்­த­மான அறிக்கை என்­பன அவை­யாகும்.

விளக்­கத்­துக்­கான திகதி

மேலே­யுள்­ள­படி தக­வல்கள் அனைத்தும் நீதி­மன்­றத்­துக்குக் கிடைத்தால் நீதி­மன்றம் விளக்­கத்­துக்­கான திக­தியைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக பகி­ரங்­க­மாக நீதி­மன்­றத்தில் மேற்­படி வழக்கைக் கூப்­பிடும். தரப்பார் தோன்ற வேண்டும். அவ்­வாறு அழைக்­கப்­ப­டு­வது விளக்­கத்­துக்­கான திக­தியை தரப்பார் அறிந்து கொள்­வ­தற்­கேயாம். சில­வேளை வழக்கு அழைக்­கப்­பட்ட திக­தியில் விளக்கம் தொடங்க முடி­யா­விட்டால் வேறு ஒரு திக­தியில் விளக்­கத்தை நீதி­மன்றம் தொடங்­கலாம்.

பிரி­விடல் சட்­டத்தின் 25 (1) ஆம் பிரிவு

முக்­கி­ய­மா­னது ஏன்?

இத்­தி­னமே பிரி­விடல் வழக்கை விளங்­கு­வ­தற்­காக நீதி­மன்றம் நிய­மித்த திக­தி­யாகும். சில­வேளை இப்­பி­ரிவின் கீழ்  இத்­தி­க­தியை நீதி­மன்றம் தகுந்த கார­ணங்­க­ளுக்­காக மாற்­றலாம்.

மாற்­றப்­பட்ட திக­தியில் நீதி­மன்றம் வழக்கின் தரப்­பா­ரது உரித்­துப்­பட்­டி­யலை பரி­சீ­லனை செய்­ய­வேண்டும். மேலும் அவ்­வு­ரித்து சம்­பந்­த­மாக  சாட்­சியம் கூறு­ப­வர்­களை விசா­ர­ணை­செய்ய வேண்டும். சாட்­சி­யத்தை எழுத்தில் எடுக்க வேண்டும்.

நீதி­மன்றம் எடுத்­துக்­கொண்ட விசா­ர­ணையை அடிப்­ப­டை­யாக வைத்து சட்­டப்­ப­டி­யான ஏதுக்­க­ளையும் நிகழ்­வு­க­ளையும்  பரி­சீ­லித்து அவற்­றின்­படி வழக்கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு அக்­கா­ணியில் உள்ள பங்­கு­களை நீதி­மன்றம் தீர்­மா­னிக்க­ வேண்டும்.

25 (2) ஆம் பிரிவு மிக­ முக்­கி­ய­மா­னது ஏன்?

இந்தப் பிரி­வின்­படி தரப்பார் உரித்­துப்­பட்­டியல் அல்­லது உரித்­து­ரி­மையைக் கூறாது இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு­த­லைப்­பட்ச விளக்­கத்தை நீதி­மன்றம் நடத்­தலாம். இந்த ஒரு தலைப்­பட்ச விளக்கம் உரித்­துப்­பட்­டி­யலை சமர்ப்­பிக்­கா­த­வர்­க­ளுக்கு எதி­ராக மட்­டுமே நடத்த முடியும். ஆகவே அவர்கள் வழக்கில் பங்­கு­பற்­ற­மு­டி­யாது.

இவ்­வாறு உரித்துப் பட்­டி­யலை சமர்ப்­பிக்­கா­த­வர்கள் வழக்கின் விளக்­கத்­தின்­போது ஏனை­ய­வர்­க­ளுடன் எந்த தர்க்­கத்­திலும் ஈடு­ப­ட­மு­டி­யாது. ஆனாலும் அவர்கள் ஏனைய பங்­கு­தா­ரர்­களின் உரித்தில் தங்­க­ளுக்கு உரித்து உண்டு என கூறு­வார்­க­ளாயின் நீதி­மன்­றத்தின் அனு­ம­தியைப் பெற்றே அவ் உரித்து பற்றி தர்க்­கிக்­க­வேண்டும்.

மேலே  கூறி­ய­வற்றைப் பார்க்­கும்­போது பங்­கு­தா­ரர்­க­ளுக்கு சில கஷ்­டங்கள் இருப்­பினும்

அவ­ர­வ­ரது பங்கைப் பெற 25 (2) ஆம் பிரிவு  இட­ம­ளிக்­கி­றது எனக் கூறலாம். இவ் இட­ம­ளிப்­பா­னது சட்­டத்­திற்­க­மை­யவே நடை­பெ­ற­வேண்­டுமே தவிர வழக்கின் தரப்­பா­ரது துக்கம் அல்­லது வேறு கார­ணங்­களைக் கொண்டு அமையக் கூடாது என்ற எண்­ணத்தை தரப்பார் மனதில் கொள்­ள­வேண்டும். ஒரு­வ­ரது அல்­லது சில­ரது துக்­கத்தை கருத்­தில்­கொண்டு உரித்­துப்­பட்­டியல் சமர்ப்­பிக்­கா­த­வர்­களை வழக்கில் சேர்க்க மேற்­படி பிரிவு இட­ம­ளிக்­க­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. ஆகவே வழக்கில் உள்ள காணியில் தங்­க­ளது  உரித்து என்ன என்­பதை தரப்பார் கூற­வேண்டும்.

மேலும் உரித்துப் பட்­டி­யலை திருத்­த ­இ­ட­முண்டு. ஆனால் குறித்த காலத்­துக்குள் அதனைச் செய்­ய­வேண்டும். எந்தக் கார­ணம்­கொண்டும் வழக்­கா­னது தரப்­பி­னரின் கவ­ன­மின்­மையால் தாமதமா­கக்­கூ­டாது என்­பதை தரப்பார் மனதில் எடுக்­க­வேண்டும். கவ­ன­மின்­மை­யா­ள­ருக்கு நிவா­ர­ணத்தை நீதி­மன்றம் வழங்­க­மு­டி­யாது. ஆகவே பிரி­விடல் வழக்கில் நீதி­மன்­றத்தின் கடமை மிக­முக்­கி­ய­மா­ன­தாக அமை­கி­றது. கேட்கும் போதெல்லாம் தவணை வழங்கி ஏனை­ய­வர்­களின் இரைச்­ச­லுக்கு நீதி­மன்றம் ஆளா­கக்­கூ­டாது என்­பதை மேற்­படி பிரிவு நன்கு உணர்த்­து­கி­றது என்று கூற­வேண்டும்.

ஆகவே பிரி­விடல் வழக்கு கஷ்­ட­மா­னது என்று கூறு­வது தவறு என்றே கொள்ள வேண்டும். தவறு தரப்­பா­ரி­டமே உள்­ளது.

பிரி­விடல் வழக்கில் தீர்க்­கப்­பட வேண்­டிய வினாக்கள் என்ன?

சிவில் வழக்­கு­களில் அதி­க­மா­னவை இரு பகு­தி­யாரின் உடன்­பாட்டால் பெரிய விளக்கம் இல்­லாமல் ஒற்­று­மை­யாக தீர்க்­கப்­ப­டு­வதும் உண்டு. குற்­ற­வியல் வழக்­கு­களில் கூட சில தக­ரா­றுகள் ஒற்­று­மை­யாகத் தீர்க்­கப்­ப­டலாம் என்று குற்­ற­வியல் நட­வ­டிக்கை சட்­டத்தில் ஒரு பிரிவு உள்­ளது. அதன் கீழ் ஒற்­று­மைப்­ப­டக்­கூ­டிய தக­ரா­றுகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. ஆனால் சிவில் வழக்­கு­களில் அவ்­வாறு குறித்த சில விட­யங்­க­ளி­லேயே தக­ரா­றுகள் ஒற்­று­மை­யாக அமைய முடியும் என்று கூற­வில்லை. ஆகவே பிரி­விடல் வழக்கு, சிவில் வழக்கு ஆதலால் சில விட­யங்கள் இரு பகு­தி­யாரின் ஒற்­று­மையின் கீழ் தீர்க்­கப்­ப­டலாம். உதா­ர­ண­மாக தக­ரா­ருக்­கு­ரிய காணியின் பெயர், விலாசம், காணியின் அளவு,  காணியின் ஆரம்ப சொந்­தக்­கா­ரர்கள் என்­பன சுமு­க­மாக தீர்க்க இட­முண்டு. இவ்­வாறு சுமு­க­மாகத் தீர்த்­ததன் பின்னர் வழக்கில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிராதில் சில திருத்­தங்கள், உரித்துப் பட்­டி­யலில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விப­ரங்­களில் சில மாற்­றங்கள் போன்­றவை இரு தரப்­பா­ரது ஒற்­று­மையின் மூலம் தீர்க்க நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளிக்­கலாம்.

சில­வற்றை சமா­தா­ன­மாகத் தீர்க்­க­மு­டி­யாத பட்­சத்தில் நீதி­மன்றம் வழக்­கெழு வினாவை எழுப்பி பின்னர் சாதா­ரண விசா­ர­ணையின் கீழ் தீர்க்க, பிரி­விடல் சட்டம் இடம் அளிக்­கி­றது.

பிரி­விடல் வழக்கில் சில விட­யங்கள் இடி­யப்ப சிக்கல் என சாதா­ர­ண­மாக கூறும் மொழியில் கூறலாம். அவ்­வி­ட­யங்கள் சம்­பந்­த­மாக முதலில் வழக்­கெழு வினாக்கள் எழுப்­பப்­ப­ட­வேண்டும். இவ்­வி­னாக்­க­ளுக்­கான விடையைப் பெறு­வ­தற்கு விசா­ரணை தேவை­யானால் சாட்­சி­களை விசா­ரிக்க பிரி­விடல் சட்டம் இட­ம­ளிக்­கி­றது.

மேலும் விசா­ரணை ஒன்று நடை­பெ­றும்­போது எச்­சந்­தர்ப்­பத்­திலும் வினா ஒன்றை எழுப்பி விடை­காண இரு தரப்­பாரும் உடன்­பட நீதி­மன்றம் உதவ வேண்டும்.

சில வேளை­களில் பிரா­திக்குப் புறம்­பா­கச்­சென்று வழக்­கெ­ழு­வி­னாவை எழுப்ப வேண்­டு­மானால் நீதி­மன்றம் இதற்கு இட­ம­ளிக்க வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது. சில சந்­தர்ப்­பங்­களில் பிராதில் இல்­லாத விடயம் சம்­பந்­த­மாக வழக்­கெழு வினாக்கள் எழுப்­பப்­ப­ட­வி­ரும்­பினால் அதனை நீதி­மன்­றத்­துக்குச் சுட்­டிக்­காட்டி வழக்­கெழு வினாவை எழுப்­பலாம். சிவில் நட­வ­டிக்கை  முறைச் சட்டக் கோவையில் இதற்கு அனு­ம­தி­யுண்டு. சிவில் வழக்­கு­க­ளுக்கு இது சட்ட ரீதி­யாகப் பொருந்தும். ஆனால் பிரி­விடல் சட்­டத்தில் இவ்­விதி இல்லை. ஆயின் பிரி­விடல் சட்­டத்தில் இல்­லாத ஒரு விட­யத்தை சிவில் நட­வ­டிக்கை முறைச் சட்­டத்தின் கீழ் எழுப்­பலாம் என்று பிரி­விடல் சட்டம் கூறு­வதால் சில வினாக்­களை மேற்­படி பிரி­வின்கீழ் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யுடன் பிரி­விடல் வழக்­கிலும் எழுப்­ப ­மு­டியும்.

பிரி­விடல் வழக்கில் நீதி­மன்றம் கவ­னிக்க வேண்­டிய மற்­று­மொரு முக்­கிய விடயம் பற்றி வீரப்பா செட்­டியார் எதிர் ரம்­புக்­பொத்த குமாரி ஹாமி என்ற வழக்கில் ஆரா­யப்­பட்­டது. இவ் விடயம் 45 NLR இல் அறிக்­கை­யிடப்பட்­டுள்­ளது. இவ் வழக்கில் தீர்க்­கப்­பட்­டது என்­ன­வெனில் பிரி­விடல் வழக்கில் சம்­பந்­தப்­பட்ட காணி­யா­னது  வேறு யாருக்கும் உரி­மை­யு­டை­யதா? என நீதி­மன்றம் கவ­னிக்க வேண்டும் என்­றாகும். ஆகவே தரப்­பினர் எழுப்பும் வழக்­கெழு கார­ணங்­களில் மட்டும் நீதி­மன்றம் தங்­கி­யி­ராமல் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் இதனைக் காண­வேண்டும் என்­றாகும். மேலும் வழக்கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உரித்து எவ்­வாறு வந்­தது என்­பதை நீதி­மன்றம் முக்­கி­ய­மாகக் கவ­னிக்க வேண்டும் என்­பதும் வற்­பு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சிவில் நட­வ­டிக்கை முறைச் சட்டக் கோவையில் 147ஆம் பிரிவின் பிர­காரம் வழக்கை சட்டம் சம்­பந்­த­மான கார­ணத்தால் முடி­வுக்கு கொண்டு வர முடி­யு­மாக இருந்தால் அவ்­வாறு நீதி­மன்றம் அதனைச் செய்­யலாம். அதற்கு சட்­டத்தில் தடை­யில்லை என்று கூறலாம்.

பிரி­விடல் வழக்கில் ஒரு­த­லைப்­பட்ச விசா­ரணை

பிரி­விடல் சட்­டத்தின் 25 (2) ஆம் பிரிவு பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது. எதி­ராளி குறித்த தினத்­தன்று உரித்­து­ரி­மையை சமர்ப்­பிக்க தவ­றினால்  நீதி­மன்றம் வழக்கை ஒரு தலைப்­பட்­ச­மாக விசா­ரிக்­கலாம் என்­கி­றது. உரித்துப் பட்­டியல் சமர்ப்­பிக்கத் தவ­றி­ய­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே ஒரு தலைப்­பட்ச விசா­ர­ணையை  நடத்­தலாம். மேலும் ஏனை­ய­வர்கள் சமர்ப்­பித்­துள்ள உரித்துப் பட்­டியல் சம்­பந்­த­மாக தனது கருத்தை உரித்துப் பட்­டி­யலை சமர்ப்­பிக்­கா­த­வர்கள் நீதி­மன்­றத்தின் அனு­ம­தி­யின்றி சமர்ப்­பிக்­க­மு­டி­யாது.

மேலும் அறிய வேண்­டி­யது என்­ன­வெனில் உரித்துப் பட்­டி­யலை சமர்ப்­பிக்க தவ­றி­ய­வர்கள் தங்­க­ளுக்கு உரித்துப் பட்­டி­யலை சமர்ப்­பிக்க அனு­மதி தரு­மாறு பின்னர் கோரினால் அவர்கள் அக் கோரிக்­கையை மறு பகு­தி­யா­ருக்கு முன்­வைத்த பின்­னரே அதனைக் கேட்­க­மு­டியும். அதேபோல் நீதி­மன்­றமும் அவர்­க­ளது தவ­றா­னது, தீய  நோக்­கு­டை­யது அல்ல என்­பதில் திருப்தி அடை­யவும் வேண்டும். மேலும் மறு­ப­கு­தி­யா­ருக்கு செல­வையும் கட்ட வேண்டும் என்று அடுத்த தரப்­பா­ருக்கு நீதி­மன்றம் கட்­ட­ளை­யிட வேண்டும்.

ஒரு தலைப்­பட்ச விசா­ரணை எப்­போது நடை­பெ­று­கி­றது என்றால் அது உரித்துப் பட்­டி­யலைச் சமர்ப்­பிக்­கா­த­போதே நடை­பெ­று­கி­றது.

இதில் முக்­கி­ய­மா­னது என்­ன­வெனில் பணம் கட்டத் தவ­றி­ய­தற்கு காரணம் தீய நோக்கம் இல்லை என்றும் நன்­நோக்­கத்­து­ட­னேயே இத்­த­வறு நடந்­துள்­ளது என்­பதில் நீதி­மன்றம் திருப்­திப்­பட வேண்டும்.

சாதா­ரண சிவில் வழக்­கு­களைப் போல் கட்­சிக்­காரர் வருகை தராமல் இருக்­கும்­போது ஒரு தலைப்­பட்ச விசா­ர­ணையை பிரி­விடல் வழக்கில் பின்­பற்­று­வ­தில்லை. இதற்­கு­ரிய கார­ணங்கள் பற்றி பல வழக்­குகள் உள்­ளன. விரும்­புவோர் பின்­வரும் வழக்­கு­களைப் படிக்­கவும் (1994) 3 SLR 6ஆம் பகுதி 168ஆம் பக்கம், 58 NLR 89 Page, 41 NLR 33, 33 NLR 217, (Full Bench)

சுருக்­க­மாக மேற்­படி தீர்ப்­புக்­களை வாசிக்கும் ஒருவர் பின்­வரும் கருத்தை ஏற்­றுக்­கொள்வார் என்­பதில் சந்­தேகம் இல்லை என நீதி­ய­ரசர் சிரி­மானே கூறி­யுள்­ள­துடன் பின்­வ­ரு­மாறு விளக்­கியும் உள்ளார். சிவில் வழக்­கு­களில் உரித்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தவே காணி வழக்­குகள் தொட­ரப்­ப­டு­கின்­றன. ஆனால் பிரி­விடல் வழக்கில் கேட்­கப்­ப­டு­வது என்­ன­வெனில் காணி ஒன்றின் பொது உடை­மையை இல்­லா­தொ­ழிக்­கு­மாறு என்று ஆகும். ஆகவே இரண்­டுக்கும் வித்­தி­யாசம் உள்­ளது என்று கூறி­யுள்ளார்.

பிரி­விடல் வழக்கில் ஒருவர் வரா­விட்­டாலும் மற்­ற­வர்கள் வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்தால் அவர்­களைக் கொண்டு வழக்கை விசா­ரித்து ஒவ்­வொ­ரு­வ­ரது பங்­கு­க­ளையும் தீர்­மா­னிக்­கலாம். ஆனால் சிவில் வழக்­கு­க­ளான உரித்து நிறுவல், உடைமை  நிறுவல் வழக்­கு­களில் இவ்­வாறு தீர்­மா­னிக்க முடி­யாது.

மேலும் பிரி­விடல் வழக்கில் ஒருவர் தனது உரித்தை சமர்ப்­பித்­தி­ருப்பார். அத்­துடன் அவ­ரது முக­வ­ரியும் அதில் அறியத் தந்­தி­ருப்பார். தீர்ப்­பா­னது தனக்கு விரோ­த­மாக  இருப்பின் 30 நாட்­க­ளுக்கு  இடையில் அது பற்­றிய தனது நிலைப்­பாட்­டையும் கூறலாம். ஆகவே தனது உரிமை பாதிக்­கப்­பட்­ட­தாக கருதும் ஒருவர் அத்­தீர்ப்பை (இடைக்­காலத் தீர்ப்பை) எதிர்க்­கலாம். சிவில் வழக்கில் இந்­நி­லை­யில்லை.

பிரி­விடல் வழக்கில் ஒருவர் விசா­ர­ணைக்கு வருகை தரா­விட்டால் பெரும் பாதிப்பு ஏற்­ப­டாது. ஆனால் சாதா­ரண சிவில் வழக்கில் விசா­ர­ணைக்கு ஒருவர் வருகை தரா­விட்டால் பெரும் பாதிப்பு ஏற்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

இடைக்­கால தீர்ப்பும் இறுதித் தீர்­வையும்

பிரி­விடல் வழக்கில் இரண்டு தீர்ப்­புக்கள் வழங்­கப்­ப­டு­வ­தாக சாதா­ரண மக்கள் அறி­யாத போதும், வழக்கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அறிவர். இவை சம்­பந்­த­மாக தெளி­வாக அறிவைப் பெற­வேண்­டு­மானால் பிரி­விடல் வழக்கின் 25 (1) ஆம் பிரி­வையும் 26 (2) ஆம் பிரி­வையும் பற்றி தெளி­வாக விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

 25 (1) பிரி­வின்­படி நீதி­மன்றம் வழக்கு விசா­ர­ணைக்கு நிய­மிக்­கப்­ப­டு­கி­றது என்று கூறி திக­தியைக் குறிக்கும். அன்­றைய தினம் அல்­லது அன்று பிற்­போ­டப்­பட்ட வேறு ஒரு தினத்தில் நீதி­மன்றம் வழக்கில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் உரித்தை பரி­சீ­லிக்க வேண்டும். உரித்தை பரி­சீ­லிப்­பது என்­பது காணியின் பங்­கு­தா­ரர்­களின் உரித்­துக்­கு­ரிய ஆவ­ணங்­களைப் பரி­சீ­லிப்­பது, சாட்­சி­யங்­களைக் கேட்­பது, ஒவ்­வொ­ரு­வ­ருக்­கு­ரிய பங்கு என்ன என்­பதை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­வது தரப்­பி­ன­ருக்கு அதனை நிரூ­பிக்கத் தேவை­யான தக­வல்­களைப் பெறு­வது என்­ப­வற்­றுடன் விசா­ர­ணை­யின்­போது எழும் சட்ட, நிகழ்வுப் பிரச்­சி­னை­களைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் பிரி­விடல் வழக்கின் 26 (2) ஆம் பிரிவின் கீழ் குறிக்­கப்­பட்­டுள்ள எந்த கட்­ட­ளையை இட­வேண்டும் என்­ப­தையும் நீதி­மன்றம் கவ­னிக்க வேண்டும். இது ஒரு நாளில் நடை­பெ­று­வ­தில்லை. பல நாட்கள் அல்­லது பல மாதங்கள், வரு­டங்கள் செல்­லலாம்.

ஆகவே 25 (1)இன் கீழ் விசா­ர­ணைக்கு வழக்கு நிய­மிக்­கப்­ப­டு­கி­றது என்று கூறி­யதும், தரப்பார் மேலே கூறிய நீதி­மன்­றத்­துக்குத் தேவைான சக­ல­வற்­றையும் தெரி­விக்க ஆயத்­த­மாக இருக்க வேண்டும். விசே­ட­மாக நீதி­மன்றம் பின்­வ­ரு­வ­ன­வற்றை மிகக் கவ­ன­மாக மனதில் எடுக்கும். தீர்க்­கப்­பட்ட வழக்­கு­களில் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

1) ‘‘வழக்­கா­ளியும் எதி­ரா­ளி­களும் கூட்­டாக பிரி­விடல் செய்­ய­வி­ருக்கும் காணியை கூட்­டாக உடைமை கொண்­டி­ருந்­தார்கள்  என்­பதில் நீதி­மன்றம் திருப்­திப்­பட வேண்டும்.

(6 புதுச்­சட்ட அறிக்கை 246ஆம் பக்கம்) அதனை நிரூ­பிக்கத் தவறின் பிரி­விடல் வழக்கு தள்­ளு­படி செய்­யப்­படும்.

2) கூட்டுச் சொந்­தக்­காரர் இஸ்லாம் பக்­தி­யாளர் ஆகையால் அவர்கள் இஸ்­லா­மிய சட்­டத்தால் ஆளப்­ப­டு­வதால் நீதி­பதி அவர்கள் தரப்­பாரின் பின்  உரித்­தாளர் இஸ்­லா­மிய (முஸ்லிம்) சட்­டத்தால் ஆளப்­ப­டு­வதால் பின்­னு­ரித்­தா­ளர்­களை அச் சட்­டத்­தின்­ப­டியே தெரிவு செய்­யப்­பட வேண்டும்’’ (51 புதுச்­சட்ட அறிக்கை 299)

3) உரிமை பற்றி எவ்­வித விளக்­கமும் இன்றி நீதி­மன்றம் இடைக்­காலத் தீர்­வையைப் பதிந்­துள்­ளதால் அத்­தீர்வை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தால் இரத்துச் செய்­யப்­ப­டும்­வரை இடைக்­கால தீர்வை வடிவில் இருக்கும்.  (58 NLR 217)

4) பிரி­விடல் சட்டம் கூட்டுச் சொந்­தக்­காரர் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உரித்து பரி­சீ­லனை செய்­யப்­ப­டுதல் கட்­டாயம் எனக் கூறு­கி­றது. நீதி­மன்றம் இவ்­வாறு செய்­யாமல் வழக்கின் தரப்பார் தங்­க­ளி­ைடயே ஓர் இணக்கப்பாட்டை செய்­து­கொள்­வது சட்­டத்தில் ஏற்­கப்­பட முடி­யாது (59 NLR 546) என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

5) பிரி­விடல் வழக்கில் இறுதித் தீர்­வைக்கு நில­ அ­ள­வை­யா­ளரின் படமும் அறிக்­கையும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஆனால் இந்த வழக்கில் நில அள­வை­யா­ளரின் படத்­துக்கு சிறி­த­ளவு மதிப்பே கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தவறு. ஏனெனில் உரித்தை ஒதுக்­கு­வ­தற்கு நில­ அ­ள­வை­யா­ளரின் அறிக்­கையும் நில­அ­ளவைப் படமும் முக்­கி­ய­மா­ன­தாகும். (2 SLLR Page 15)

6) அறி­வுசார் நீதி­பதி அவர்கள் காணியின் உரித்து விப­ரத்தைப் பார்க்­காமல் தீர்ப்பை வழங்­கி­யுள்ளார் என்­பது தெட்டத் தெளி­வாகத் தெரி­கி­றது. (2005) 3 SLLR 197) என்று கூறப்­பட்­டுள்­ளது.

மேலே கூறிய இடைக்­காலத் தீர்ப்பு பற்­றியும் இடைக்­கால தீர்ப்­புடன் கூடிய இறுதி தீர்­வையும் பற்­றிய  இன்னும் சில விட­யங்கள் உண்டு. இதில் கவ­னிக்­க­வேண்­டி­யது இடைக்­கால தீர்­வையும் 25 (1) ஆம் படி­யா­னது மற்றும் 26 (2)இன் படி­யா­ன­து­மான இறுதித் தீர்­வையும் பற்றி அறி­ய­வேண்­டி­ய­வைகள் சில பின்­வ­ரு­மா­றாகும். அதா­வது

25 (1)இன் கீழ் வழங்­கப்­ப­டு­கின்ற இடைக்­காலத் தீர்வும் 26 (2)இன் கீழ் வழங்­கு­கின்ற இறுதித் தீர்வும் ஒன்­றுடன் ஒன்று ஒத்­துப்­போ­காத முறையில் இருக்­க­மு­டி­யாது. ஆகவே இரண்டு தீர்­வையும் பின்­வ­ரு­மாறு கூற­வேண்டும்.

அ) காணி­யா­னது பிரி­விடல் செய்­யப்­ப­ட­வேண்டும்.

ஆ) விரும்பின் முழுக்­கா­ணியும் விற்­பனை செய்­யப்­ப­டலாம் அல்­லது கூறுகள் மூலம் விற்­பனை செய்­யலாம்.

இ) காணியில் ஒரு பகுதி பிரிக்­கப்­பட்டும் விரும்பின் ஏனைய பகுதி பிரிக்­கப்­ப­டாமலும் வைத்­தி­ருக்­க முடியும்.

ஈ) தனக்கு ஒதுக்­கப்­பட்ட பகு­தியை ஒருவர் விற்­பனை செய்­யாமல் வைத்­தி­ருக்­கலாம்.

உ) ஒரு குறித்த தரப்­பி­ன­ருக்கு அல்­லது குழு­வி­ன­ருக்கு அவர்­க­ளது விருப்­பப்­படி காணியை பிரிந்துக் கொடுக்­கலாம்.

ஊ) யாருக்கும் ஒதுக்­கப்­ப­டாத காணித்­துண்டு அப்­ப­டியே இருக்க இட­ம­ளிக்­கலாம். இவை இரண்டு தீர்­வை­யிலும் அடங்­க­வேண்டும்.

பிரி­விடல் செய்யும் முறை பற்றி சில ஆலோ­சனைகள் இவை சட்­டத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டவை 1997 ஆம் ஆண்டு 17 ஆம் பிரிவு

சில சம­யங்­களில் பல்­வேறு காணி­களை இணைத்து பிரி­விடல் செய்­ய­வேண்­டிய தேவை­யேற்­ப­டு­வ­துண்டு. உதா­ர­ண­மாக பல காணி­களை பிரி­விடல் செய்­யும்­போது ஒவ்­வொரு காணியும் சிறிது சிறி­தாக இருக்­கி­றது என வைத்­துக்­கொண்டால் ஒவ்­வொரு காணி­யிலும் சிறு சிறு பங்­கு­களே ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கிடைக்­கக்­கூடும். அதனை வைத்து ஒன்­றுமே செய்ய முடி­யாது. ஆகவே அக்­கா­ணிக்­கு­ரிய சொந்­தக்­காரர் ஒவ்­வொரு காணி­யிலும் தமக்குக் கிடைக்கும் பங்­கு­களை ஒன்­றா­கச்­சேர்த்து ஒரு காணியில் தரு­மாறு கேட்­கலாம். அச்­சந்­தர்ப்­பத்தில் அதனை நீதி­மன்றம் ஏற்­கலாம். அப்­போது நீதி­மன்றம் செய்­ய­வேண்­டி­யது என்­ன­வெனில், சிறு பங்­கு­களைப் பெறப் போகி­ற­வர்­க­ளுக்கு அவர்­க­ளது பங்­கு­க­ளுக்­கு­ரிய பணத்தை வழங்­கி­விட்டு அப்­பங்­கு­களை  எல்லாம் சேர்த்து 5 பேர்ச்சஸ் அல்­லது 6 பேர்ச்சஸ் துண்­டு­களை பங்­கு­தாரர் ஒரு­வ­ருக்கு வழங்க 1997 ஆம் ஆண்டு சட்டம் இட­ம­ளிக்­கிறது.

அதேபோல் பிரி­விடல் செய்­யப்­ப­ட­வி­ருக்­கின்ற காணியின் ஒரு பகு­தியில் கூட்டுச் சொந்­தக்­கா­ரரில் ஒருவர் அபி­வி­ருத்தி செய்­தி­ருந்தால் அவ­ருக்கு வழங்­க­வேண்­டிய பகு­திக்கு இப்­ப­கு­தியை அவ­ருக்கு வழங்­கலாம். அவ்­வாறு வழங்­கும்­போது அபி­வி­ருத்தி செய்த பகு­திக்­கு­ரிய பணத்தை கழித்­துக்­கொண்டு மிகு­திப்­பணத்தை பங்கைத் தந்­த­வ­ருக்கு வழங்­க­வேண்டும். அப்­பு­ஹாமி எதிர் சாஞ்­சி­ஹாமி 21 NLR 33 என்ற வழக்கில் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பிரி­விடல் வழக்­கொன்றில் எதி­ராளி வழக்­கா­ளியின் உரித்தை அங்­கீ­க­ரித்தால் மட்டும் வழக்­கா­ளிக்கு உரித்து வந்­து­வி­டாது. நீதி­மன்­றமும் அவ்­வு­ரித்தை பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

நீதி­பதி ஒரு­வ­ருக்கு கட்­சிக்­கா­ரர்­களின் விருப்பம் மட்டும் காணியைப் பிரிப்­ப­தற்கு உத­வாது  என்று 9 CLW 33 இல் கூறப்­பட்­டுள்­ளது. வேறு நிபந்­த­னை­களும் உண்டு.

பிரி­விடல் வழக்கு ஒன்றில் இடைக்­காலத் தீர்வை அளிக்­கப்­பட்ட பின்னர் அல்­லது இறுதி நில­ அ­ளவை செய்­யப்­பட்­டதன் பின்னர் வேறு ஒரு­வ­ருக்கு அவ்­வ­ழக்கின் தரப்­பா­ராக வழக்கின் உள்ளே வர எந்த உரி­மையும் இல்லை. ஆனால் அவர் அக்­கா­ணியில் தனக்கும் சொந்தம் இருக்­கி­றது என்று கூறி தர்க்­கிப்­பா­ரானால் இதற்கு ஆதா­ர­மான ஆவ­ணங்­களைச் சமர்ப்­பிப்­பா­ரானால் அதனை அவர் காணியின் தீர்ப்பை வழங்­கிய மாவட்ட நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்க முடி­யாது. எனினும் மாகாண மேல் நீதி­மன்­றத்தில் மீளாய்வு விண்­ணப்பம் செய்­வதன் மூலம் அல்­லது உரிய நிலையில் வைக்­கு­மாறு (Restitutio Intergrum) கேட்கும் விண்­ணப்­பத்தைச் செய்­யலாம்.

மேற்­படி விண்­ணப்­பத்தை பரி­சீ­லனை செய்யும் மாகாண மேல்­நீ­தி­மன்றம் அவ்­விண்­ணப்­பத்தைச் செய்­ப­வரின் உரிமை இல்­லாமல் போய்­விட்­டது என்­பது உண்மை என்று கரு­து­மானால் அவ்­வாறு உரிமை இல்­லாமல் போவ­தற்கு வழக்­கா­ளரின் செயல் பிரி­விடல் வழக்கின் விதி­க­ளுக்கு முர­ணாக அமைந்­தது என்று கரு­தினால் மட்­டுமே மாவட்ட நீதி­மன்றம் வழங்­கிய இடைக்­கால தீர்­வையை ரத்துச் செய்து இறு­தித்­தீர்­வையை மீள­ வ­ழங்க வேண்­டு­மென்று கட்­ட­ளை­யி­டலாம்.

சோமா­வதி எதிர் மட­வல வழக்கு

1983 ஆம் ஆண்டு 2 ஸ்ரீ.ல.சட்ட அறிக்கை 15ஆம் பக்­கத்தில் அறிக்­கை­யி­டப்­பட்ட சோமா­வதி எதிர் மடவல என்ற வழக்கிலும் 1984ஆம் ஆண்டு 1 ஸ்ரீ.ல.சட்ட அறிக்கை 57 ஆம் பக்கத்தில் அறிக்கையிடப்பட்டுள்ள பியசேன எதிர் மார்கிரட் பெரேரா மற்றும் இருவர் என்ற வழக்கிலும் முன்வைத்த அப்பீல் காரணமாக அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோமசிறி பெரேரா எதிர் K.மகலின் நோனாவும் மற்றும் 9 பேர் வழக்கு

இந்த வழக்கில் நீதிமன்றம் இறந்தவருக்குப் பதிலாக பதிலீடு செய்யாமல் வழக்கை நடத்தி தீர்ப்பை வழங்கியதால் அதிருப்தி அடைந்தவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தனக்கு நடந்த துர்ப்பாக்கியத்தை எடுத்துக் காட்டியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்ததுடன் ஆரம்பத்தில் இருந்து வழக்கை விசாரிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்துக்கு கட்டளையும் இட்டது. இந்த வழக்கு 1994 ஆம் ஆண்டு 12–16 இல் தீர்க்கப்பட்ட வழக்காகும்.

மேரி மட்டில்லா பெரேரா எதிர் டொன் வில்சன் வழக்கு 1995.3.01

இந்த வழக்கில் பிரிவிடல் செய்யவேண்டிய காணி எது எனத் தெரியாது காணி வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தான் பாதிக்கப்பட்டதாக மேன்முறையீட்டாளர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவறு நடந்துள்ளதை ஏற்றுக்கொண்டு மீளாய்வு விண்ணப்பக் காரியாலய வழக்கின் தரப்பாளராக ஏற்றுக்கொண்டு ஆரம்பத்தில் இருந்து விசாரணையை நடத்த உத்தரவு இட்டது.

இவ்வாறு பல வழக்குகள் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டப்படி விசாரணை நடை­பெறாமல் இருப்பின் மேன்முறையீட்டால் அத்தீர்ப்பை இரத்துச் செய்து மீண்டும் விசார­ணையை நடத்தலாம்.

தொகுப்புரை

ஒரு காணி பல உரித்தாளர்களுக்குச் சொத்தான உடைமையில் இருக்கும்போது அதனை இரத்துச்செய்து அந்த உரித்தாளர் ஒவ்வொரு­­­­­வருக்கும் அக்காணியைப் பிரித்துக் கொடுப்பதற்கான சட்டமே பிரிவிடல் சட்டமாகும். இதனை மாவட்ட நீதிமன்றத்திலேயே விசேடமாக அக்காணி அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற எல்லைக்­குள்ளேயே தாக்கல் செய்யவேண்டும்.

பலருக்குச் சொந்தமான காணி பிரிவிடல் வழக்கின் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு (பங்குதாரர்களுக்கு) சொந்தமாகிறது.

மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பில் அதிருப்தியுறும் தரப்பார் மாகாண மேல் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு அல்லது மீளாய்வு செய்து தமது பங்கைப் பெறலாம்.

நீண்டகாலம் எடுப்பினும் உண்மையாக உரித்து இருப்பின் இவ்வழக்கை தாக்கல் செய்து உரித்தைப் பெறுவதால் பலன் உண்டு என்றும் கூறலாம்.

(கே.ஜீ.ஜோன் - சட்டத்தரணியும் ஆய்வாளரும் )