2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பெற்ற மறக்க முடியாத பதிவுகள்.

01. 2019.01.07 - இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியதனூடாக 72 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றுள்ளது.

02. 2019.01.26 - ரோகித் பாவ்டெல்

ஐக்கிய அரபு எமீரேடஸ்ஸுக்கு எதிராக இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணியின் ரோகித் பாவ்டெல் இளம் வயதில் (16 வயது, 146 நாள்) அரைசதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

03. 2019.01.28 - பராஸ் கட்கா

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்களில் நேபாள அணி வீரர் பராஸ் கட்கா சதம் விளாசினார். இதுவே நேபாள அணி வீரர் ஒருவர் சர்வதேச ஒருநாள் அரங்களில் பெற்ற முதல் சதம் ஆகும்.

04. 2019.02.01 - மித்தாலி ராஜ்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 200 போட்டிகள் விளையாடிய முதல் பெண் என்ற சாதனையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மைத்திலி ராஜ் பெற்றார்.

05. 2019.02.23 - இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியமை.

06. 2019.02.23 - ஆப்கானிஸ்தான்

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிராக 278 ஓட்டங்களை குவித்து. இதுவே இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டமாக பதிவானது.

07. 2019.03.18 -  ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து அணியை வீழ்த்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

08. 2019.03.23 - நைஜீரியா

19 வயதிற்குட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு முதன்முதலாக நைஜீரிய இளையோர் அணி தகுதிபெற்றது.

09. 2019.04.27 - கிளார் போலோசக் 

ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் என்கிற சாதனையும், பெருமையையும் அவுஸ்திரேலியாவின் கிளார் போலோசக் பெற்றார்.

10. 2019.06.18 - இயன் மோர்கன்

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கள் 17 சிக்ஸர்களை விளாசி, ஒருநாள் கிரிக்கெட் அரங்களில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பதிவை நிகழ்த்தினார்.

11. 2019.06.20 - உகண்டா

இருபதுக்கு - 20 போட்டியில் உகண்டா மகளிர் அணி மாலி அணிக்கு எதிராக 314 ஓட்டங்களை குவித்து, சாதனை படைத்தமை. இப் போட்டியில் மாலி  அணி 10 ஓட்டங்களுக்கு அனைத் விக்கெட்டுக்க‍ளை இழந்து 304 ஓட்டங்களால் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

12. 2019.06.27 - விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு 20) மொத்தமாக 20 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி பெற்றார்.

13. 2019.07.06 - ரோகித் சர்மா

சர்வதேச ஒருநாள் உலகக கிண்ண அத்தியாயத்தில் கூடுதலான சதங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ரோகித் சர்மா பெற்றார ( 05 சதங்கள்)

14. 2019.07.11 - மிட்செல் ஸ்டாக்

சர்வதேச ஒருநாள் உலகக கிண்ண அத்தியாயத்தில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற சாதனை அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டாக் பெற்றார் (27 விக்கெட்டுகள்)

15. 2019.07.14 - இங்கிலாந்து

சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்த இங்கிலாந்து அணி முதன் முதலாக ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

16. 2019.07.21 - அவுஸ்திரேலியா

இங்கிலாந்து மகளிர் அணியுடனான போட்டியானது சமனிலையில் முடிவடைந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலிய மகளிர் அணி ஆஷஸ் கிண்ணத்தை தன் வசப்படுத்தியது.

17. 2019.08.01 - இங்கிலாந்து - அவுஸ்திரேலியா

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வீரர்களின் ஜேர்சியில் அவர்களது பெயர் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்டு, போட்டி இடம்பெற்றமை.

18. 2019.08.25 - பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பினை தட்டிப் பறித்த பென்ஸ்டோக்கின் அற்புதமான 135 ஓட்டங்கள்.

19. 2019.09.05 - தாய்லாந்து

தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி 2020 இல் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடருக்கு விளையாட தகுதி பெற்றமை.

20. 2019.09.06 - லசித் மலிங்க

நிஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்க 100 விக்கெட்டுக்களை எடுத்து சாதனை படைத்தது மாத்திரமல்லாது ஹெட்ரிக் சாதனையையும், தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்களையும் சாய்த்தும் தள்ளினார்.

21. 2019.09.11 - மேகன் ஷட்  

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் மேகன் ஷட் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் எடுத்ததுடன், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரண்டு ஹெட்ரிக் சாதனையை படைத்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

22. 2019.09.15 - ஆஷஸ்

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரானது கடந்த 1972 ஆம் ஆண்டுக்கு பின்னர், சமனிலையில் முடிந்தது.

23. 2019.10.02 - அலிசா ஹெலி

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹெலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காது 148 ஓட்டங்களை பெற்றார். இதுவே மகளிர் இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் ஆகும்.

24. 2019.10.09 - அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 19 வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்தமை.

25. 2019.10.27 - பப்புவா நியூகினியா

கென்யாவை தோற்கடித்து பப்புவாநிபூகினியா 2020 இருகதுக்கு - 20 உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது.

26. 2019.11.10 - தீபக் சஹார்

பங்களாதேஷ் அணியுடனான இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வீரர் தீபக் சஹார் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சர்வதேச ஆண்கள் இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சு இதுவே.  

26. 2019.11.22 - இந்தியா

இந்திய அணி தான் எதிர்கொண்ட முதலாவது பகலிரவு டெஸ்ட் தொடரை பங்களாதேஷை தோற்கடித்து கைப்பற்றியமை.

27.2019.11.30 - டேவிட் வோர்னர்

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 335 ஓட்டங்களை குவித்தமை.

28.2019.12.02 - அஞ்சலி சாந்த்

மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் ஓட்டங்கள் எதனையும் கொடுக்காமல் 6 விக்கெட்களை வீழ்த்தி நேபாளம் மகளிர் அணியின் அறிமுக வீராங்கனை அஞ்சலி சாந்த் சாதனை. 

29.2019.12.11 - இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டமை.

- ஜெ.அனோஜன்